தமிழ் என்றாலே மோடி அரசு அஞ்சி நடுங்குகிறது - தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆவேசம்

Feb 8, 2018, 21:49 PM IST

தமிழ் என்றாலே அஞ்சி நடுங்குகிறது மோடி அரசு என்பதன் அறிகுறிதான் சென்னை விமானப் போக்குவரத்து அறிவிப்புப் பலகையில் இருந்து தமிழ்மொழியை நீக்கியது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் என்றாலே அஞ்சி நடுங்குகிறது மோடி அரசு என்பதன் அறிகுறிதான் சென்னை விமானப் போக்குவரத்து அறிவிப்புப் பலகையில் இருந்து தமிழ்மொழியை நீக்கியது! அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசை ஆளுநரைக் கொண்டு நீடிக்கச் செய்வதால்தான் இதனைச் செய்ய முடிகிறது! இதனை வன்மையாக கண்டிப்பதுடன், தமிழுக்கு எதிராகத் தொடரும் அழிச்சாட்டியங்களைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!! தமிழ்மொழியை அதன் சொந்த மண்ணிலிருந்தே அப்புறப்படுத்தும் வேலையைத் தொடர்கிறது ஒன்றிய பாஜக மோடி அரசு.

அந்த வரிசையில் தற்போது சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு குறித்த தகவல்களைத் தெரியப்படுத்தும் அறிவிப்புப் பலகையில் இருந்து தமிழ்மொழியை நீக்கிவிட்டிருக்கிறது மோடி அரசு. முதலில், தேசிய நெடுஞ்சாலையோர மைல்கற்களில் தமிழ்மொழியை அழித்துவிட்டு இந்தியில் எழுதப்பட்டது. பிறகு, உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை என்று சொல்லி, சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் மறுக்கப்பட்டது.

இப்போது, சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் விமானங்கள் வருவது, போவதை அறிவிப்பதிலிருந்து தமிழ்மொழி நீக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் அறிவிப்பு செய்யப்பட்டது. இனி தமிழில் அறிவிப்பு செய்யப்படாது. இதனால் தமிழ் மட்டுமே தெரிந்த பயணிகள் மற்றும் அவர்களை வழியனுப்பவும் அழைத்துச் செல்லவும் வருவோரும் அவதிப்படுவர். அந்தந்த மாநில மக்களுக்காகவே அந்தந்த மாநில மொழிகளிலான அறிவிப்பு. அதற்குத் தடை போடுவது உள்நோக்கமேயன்றி வேறெதுவும் இருக்க முடியாது.

அந்த வகையில், தமிழுக்குத் தடை போடுவது தமிழினத்தைக் கருவறுக்கும் செயலன்றி வேறில்லை. ஆனால் விமான நிலைய இயக்குநரோ, அதிக அளவு விமானப் போக்குவரத்துள்ள நேரத்தில் 3 மொழிகளிலும் அறிவிப்பதால் தகவல்களைத் தெரிந்துகொள்ளத் தாமதம் ஏற்படுவதால், காலை நேரத்தில் மட்டுமே தமிழையும் இந்தியையும்கூட தவிர்த்து ஆங்கிலத்தில் மட்டும் அறிவிப்பு செய்வதாகச் சொல்கிறார்.

இது சமாளிப்பின்றி வேறல்ல. ஆனால் மோடி அரசைப் பொறுத்தவரையில் தமிழ் என்றாலே அஞ்சி நடுங்குகிறது என்பதுதான் உண்மை. அதன் அறிகுறிதான் இந்த விமான வருகை மற்றும் புறப்பாடு குறித்த அறிவிப்புப் பலகையிலிருந்து தமிழ்மொழியை நீக்கியிருப்பது! இதனை வன்மையாக கண்டிப்பதுடன், தமிழுக்கு எதிராகத் தொடரும் மோடி அரசின் அழிச்சாட்டியங்களைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!!.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You'r reading தமிழ் என்றாலே மோடி அரசு அஞ்சி நடுங்குகிறது - தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆவேசம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை