வைரமுத்துவும் ஆண்டாள் நாச்சியாரின் குழந்தைதான். ஆண்டாள் அவருக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, மன்னிப்பு கேட்க வைப்பார் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து அவர்கள், ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை என்றும், கலாச்சார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள் என்றும் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்களும், ஆதரவு குரல்களும் எழுந்தன. இதனையடுத்து வைரமுத்து அதற்கு மறுப்புத் தெரிவித்ததோடு வருத்தமும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, ஜீயர் சடகோப ராமானுஜர் ஆண்டாள் கோவிலில் உண்ணாவிரதம் இருந்தார்.
பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இருப்பினும் பிப்ரவரி 3-ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறினார்.
மேலும், “கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும் ஆனால் செய்ய மாட்டோம். ஆனால், இறை நம்பிக்கைக்கு எதிராக யார் பேசினாலும், இனி அமைதியாக போகமாட்டோம்” என்று கூறி இருந்தார். இதற்கும் பல தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராமானுஜ ஜீயர், “துறவிகளின் தர்மத்தை மீறிய தமது பேச்சால், இந்துக்களின் மனது புண்பட்டதால் ஆண்டாள் தாயாரிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன்” என்றார்.
மேலும், வைரமுத்து தரப்பில் தற்போது வரை எந்த விளக்கமும் தராத காரணத்தால், அதனை கண்டித்து ஜீயர், சடகோப ராமானுஜர் மீண்டும் உண்ணாவிரதத்தை துவக்கினார்.
பின்னர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “இனி எந்த மேடையிலும் யாரும் அப்படிபேசக் கூடாது. கிறிஸ்துவ மதத்தையும் சரி; இஸ்லாமிய மதத்தையும் சரி; எந்த மதத்தையும் யாரும் இழிவாகப் பேசக்கூடாது என்பதே இங்கே கூடியிருக்கும் ஆண்டாள் பக்தர்களின் வேண்டுகோள். வைரமுத்துவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
அவர் ஆண்டாள் கோவிலுக்கு வந்துதான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அவசியம் இல்லை. உலக மக்களின் சாபத்துக்கு ஆளாகாமல், தான் அப்படி பேசியது தவறு என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் போதும். வைரமுத்துவும் ஆண்டாள் நாச்சியாரின் குழந்தைதான். ஆண்டாள் அவருக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, மன்னிப்பு கேட்க வைப்பார்” என்று தெரிவித்துள்ளார்.