மேற்கு வங்கத்தில் பயங்கரம் பா.ஜ.க., திரிணாமுல் மோதல் 4 பேர் சுட்டுக் கொலை

4 killed in Bengals North 24 Parganas as TMC-BJP clashes continue

by எஸ். எம். கணபதி, Jun 9, 2019, 12:59 PM IST

தேர்தல் முடிந்த பின்பும் மேற்கு வங்கத்தில் வன்முறை ஓயவில்லை. அங்கு ஆளும் திரிணாமுல் கட்சியினருக்கும், பா.ஜ.க. கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில், 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

 

 

 

 


மேற்கு வங்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 2 இடங்கள் மட்டுமே பெற்ற பா.ஜ.க, இந்த முறை 18 நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றுள்ளது. தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியினருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. அமித்ஷாவின் பொது கூட்டம் நடந்த போது கூட வன்முறை வெடித்தது.


தேர்தலுக்கு பின் மற்ற மாநிலங்களில் அரசியல் அமைதி ஏற்பட்டு விட்டது. ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும் பதற்றம் ஓய்ந்தபாடில்லை. அங்கு திரிணாமுல் கட்சியில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 54 கவுன்சிலர்கள், பா.ஜ.க.வுக்கு தாவினர். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கிறது.
இந்த மோதல் சில இடங்களில் கலவரமாக மாறி வருகிறது. வடக்கு பர்கானா மாவட்டத்தில் சந்தோஷ்காலி பகுதியில் பா.ஜ.க. தொண்டர்கள் அந்த கட்சிக் கொடிகளை ஏற்றினர். அப்போது திரிணாமுல் கட்சியினர் அங்கு வந்து கொடிக்கம்பங்களை பிடுங்கி போட்டனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

 

திரிணாமுல் கட்சியினர் கூறுகையில், தங்கள் கட்சிக் கொடிகளை அகற்றி விட்டு அந்த இடத்தில் பா.ஜ.க.வினர் கொடிகளை நட்டதால்தான் மோதல் ஏற்பட்டது என்றனர்.
இந்த மோதல் பயங்கர கலவரமாக மாறியதில் இருதரப்பிலும் பலர் காயமடைந்தனர். மேலும் 4 பேர் வரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து பா.ஜ.க. பொதுச் செயலாளர் சயந்தன் பாசு கூறுகையில், ‘‘எங்கள் கட்சியைச் சேர்ந்த சுகந்தா மோன்டல், பிரதீப் மோன்டல், சங்கர் மோன்டல் ஆகிய 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’’ என்றார்.


திரிணாமுல் மாவட்டத் தலைவரும், அமைச்சருமான ஜோதிப்பிரியா மாலிக் கூறுகையில், ‘‘ஹட்காச்சிப் பகுதியில் எங்கள் கட்சியினர் நடத்திய கூட்டத்திற்குள் பா.ஜ.க.வினர் புகுந்து கடுமையாக தாக்கினர். சேர்ந்த கயூம் மோல்லா என்பவரை இழுத்து சென்று கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர். அவர்களின் தாக்குதலில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 6 பெண்கள் உள்பட 18 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். பல இடங்களில் பா.ஜ.க.வினர்தான் வன்முறையில் ஈடுபடுகின்றனர்’’ என்றார்.
கலவரம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இரு கட்சியினரும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். 3 பா.ஜக. தொண்டர்களும், ஒரு திரிணாமுல் தொண்டரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’’ என்றார்.
இந்நிலையில், திரிணாமுல் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்த மூத்த தலைவர் முகுல்ராய், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மேற்கு வங்க நிலைமை குறித்து புகார் கூறியுள்ளார்.

You'r reading மேற்கு வங்கத்தில் பயங்கரம் பா.ஜ.க., திரிணாமுல் மோதல் 4 பேர் சுட்டுக் கொலை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை