அனைத்து போலீஸ் குடியிருப்புகளிலும் மாட்டுக் கொட்டம் கட்டாயம் என உத்திரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போலீஸூக்கு துணையாக அவசரக் காலங்களில் உதவ பட்டாலியன் போலீஸ் படை அமைக்கப்பட்டது. எந்நேரமும் இவர்களுக்கான வேலை வரலாம் என்ற நிலையில், இவர்களின் குடும்பத்தினருக்காக தனி குடியிருப்புகளும், அங்கேயே அவர்களின் குழந்தைகளுக்காக பள்ளி வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், பட்டாலியன் குடியிருப்புகளில், பள்ளிகள் இருப்பதைப் போல இனி மாட்டுத்தொழுவங்களும் இருக்க வேண்டும் என்று ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
ஆதித்யநாத்தின் யோசனை, அரசு மூலம் சில நாட்களுக்கு முன் பட்டாலியன் படைக்கு அனுப்பப்பட்டது. அதில் “பசுக்களைப் பாதுகாக்க நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்; ஆகவே உங்கள் கட்டடத்திற்குள் மாட்டுத்தொழுவம் அமைக்க இடம் கொடுக்க வேண்டும்” என்று கேட்கப்பட்டிருந்தது.
ஆனால், பட்டாலியன் குடியிருப்பு இயக்குநராக இருக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ராஜிவ் குப்தா இதற்கு அனுமதி அளிக்கவில்லை. பட்டாலியன் குடியிருப்புப் பகுதிகளில் மாட்டுத்தொழுவம் நடத்துவது கஷ்டம் என்று தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பணிகளில் இருக்கும் பட்டாலியன் படைக்கு நிறைய வேலை இருக்கிறது; அதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
ஆனால், அதை ஏற்காத ஆதித்யநாத் அரசானது, மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. “பட்டாலியன் படையின் குடியிருப்பில் பள்ளிகள் இயங்கி வருகிறது. பள்ளிகளை இயக்க நேரம் இருக்கும் போது மாட்டுத்தொழுவமும் நடத்தலாம்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மாடுகளின் நன்மைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் ஆதித்யநாத் அரசு கூறியுள்ளது.
முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில் பசுமாட்டுச் சிறுநீரை ‘சுகாதார பானம்’ என்ற பெயரில், வீடு, வீடாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாடு வழங்கப்படும் முக்கியத்துவம் கூட மனிதர்களுக்கு வழங்கப்படவில்லை என்று அங்குள்ளவர்கள் நொந்துகொள்கிறார்.