என் வீட்டில் இருந்தே மாற்றத்தை தொடங்குகிறேன்!- கமலஹாசன் அதிரடி

விரைவில் புதிய கட்சி...

Sep 15, 2017, 18:04 PM IST

நடிகர் கமலஹாசன் கடந்த சில மாதங்களாக தமிழக அரசு மீது கடும் தாக்குதல்களை ட்விட்டர் மூலம் நடத்தி வந்தார். திடீரென அமைச்சர்களின் ஈ-மெயில் முகவரிகள் அடங்கிய வெப்சைட் லிங்க்கையும் வெளியிட்டு, அரசாங்கம் செய்யும் ஊழல்களையும் அதன் ஆதாரங்களையும் அவர்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று தன் ரசிகர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கூட, தன் அரசியல் பிரவேசம் குறித்து கமலஹாசன் வெளியிட்டு வந்தார். 

கமலஹாசன் அரசியல் பிரவேசம்

முரசொலி பவளவிழா மேடையில் பேசியபோது,  'நீங்கள் உங்கள் கட்சியில் வந்து சேர என்னை கட்டாயப்படுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இங்கு வந்தேன்' என்று பேசி திமுகவில் இணையப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில் ஆங்கில இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டி விரைவில் அரசியலுக்குள் நுழைவார் என்பதையே காட்டுகிறது. பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

''சமீபத்தில் நான் கேரள முதல்வரை சந்தித்தேன். அதற்காக, கம்யூனிஸ்டு கட்சியில் இணையப்போவதாக கூறினர். பல கட்சி தலைவர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால் பிற கட்சிகளில் சேரும் எண்ணம் இல்லை. அரசியலில் மாற்றம் வேண்டும். புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்தே இந்த மாற்றத்தை தொடங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

முதலில் எனது வீட்டிலிருந்து மாற்றத்தைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.
அதேநேரம், மாற்றத்தை கொண்டு வர எவ்வளவு தாமதம் ஆனாலும் பரவாயில்லை. என்னை சந்தர்ப்பவாதி என்று சொல்லலாம். நான் சந்தர்ப்பவாதிதான்.இதுதான் தீவிர அரசியலில் ஈடுபட சரியான வாய்ப்பு. காரணம் அனைத்துமே தவறாக நடந்து கொண்டிருக்கிறது. நமக்கு சிறந்த அரசு தேவைப்படுகிறது.

அரசியலில் கமல்ஹாசன்

நான் அவசரகதியில் தீர்வுகள் கிடைத்துவிடும் என சொல்லவில்லை.
மாற்றத்தை முன்னெடுத்து செல்வேன். இது என் வாழ்நாளில் கூட நிறைவேறாமல் போனாலும் எனக்கு பின் வருபவர்கள் வழி நடத்திச் செல்வார்கள். அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சிதான் தொடங்குவேன். இந்த நிகழ்வு எனது விருப்பத்தின் படி நடக்கப்போவதில்லை, கட்டாயத்தின்பேரில் நடக்க இருக்கிறது.

ஏனெனில் எனது கொள்கைகளுடன் எந்த கட்சியின் சித்தாந்தங்களும் முழுமையாக பொருந்தவில்லை. இந்தியாவில் அரசியல் அமைப்பு தோல்வி அடைந்து விட்டதால், இதில் மாற்றம் வரவேண்டும்,ஊழல் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று நினைக்கிறேன்.
5 ஆண்டுகள் ஆட்சி செய்ய முதல்வராக தேர்ந்து எடுக்கப்படும் ஒருவர் சிறப்பாக செயல்படாவிட்டால் அடுத்த 5 ஆண்டுகள் காத்திருந்துதான் ஓட்டுப் போட்டு மாற்ற முடியும் என்ற நிலை மாறி, உடனே அவரை பதவி நீக்கம் செய்யும் முறை வேண்டும்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால் உடனே அவர்களை மாற்ற வழிவகுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் அரசியலில் நல்ல மாற்றம் ஏற்படும்.
ஊழல் இருக்காது, சரியான நேரம் அமைந்தால் மாற்றம் தொடங்கும். அதற்கான வேலைகள் இப்போது தொடங்கி விட்டன. ஊழல் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். நான் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது' எனத் தெரிவித்துள்ளார். 

கமலஹாசனின் இந்த பேட்டி, அரசியல் அரங்கில் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படும் நிலையில், ட்விட்டர் பக்கத்தில் ஆசிரியர்கள் போராட்டம் பற்றிய தன் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், "வேலை செய்யாமல் சம்பளம் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா.... ரிசார்ட்டில் முடங்கி கிடக்கும் குதிரைபேர அரசியல்வாதிகளுக்கு கிடையாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.  ஆசிரியர்களை கண்டிக்கும் நீதித்துறை, எம்.எல்.ஏ.க்களையும் கண்டிக்க வேண்டும் '' எனக் கூறியுள்ளார். 

கமல்ஹாசனின் நடவடிக்கைகள் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்கிறது!

You'r reading என் வீட்டில் இருந்தே மாற்றத்தை தொடங்குகிறேன்!- கமலஹாசன் அதிரடி Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை