சீரற்ற மாதவிடாய் சுழற்சியினால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. சீரற்ற சுழற்சி கொண்டோரில் பலருக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் (Polycystic Ovary Syndrome - PCOS) இருப்பதும் தெரிய வந்துள்ளது. பிசிஓஎஸ் என்னும் குறைபாடு கொண்ட பெண்களுக்கு மனவேதனை, மனப்பாங்கில் மாற்றம், எடை கூடுதல், உடலில் அதிகமாக முடி வளர்தல், மாதவிடாய் சரியாக வராதிருத்தல் ஆகிய பிரச்னைகள் இருக்கிறது.
இக்குறைபாட்டினை சரிசெய்து 28 முதல் 31 நாள் கொண்ட சீரான மாதவிடாய் சுழற்சி பெறுவதற்கு சில யோகாசனங்கள் உதவி செய்கின்றன. ஒவ்வொரு யோகாசனத்தையும் தினமும் 15 நிமிட நேரம் செய்து வருதல் பலனளிக்கும். முறையற்ற உணவு, வேலைநேரம் ஆகியவற்றால் ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படுவதால் இதுபோன்ற பிரச்னைகள் தோன்றுகின்றன. இந்த யோகாசனங்கள் இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதியிலுள்ள தசைகள் நன்கு வேலை செய்யவும், எல்லா சுரப்பிகளும் ஹார்மோன்களை சரியானபடி சுரக்கவும் தூண்டும். யோகாசனம் செய்தல், ஆரோக்கியமான உணவினை சாப்பிடுதல் மற்றும் சரியான உறக்கம் ஆகியவை மாதவிடாய் சுழற்சி சீராக உதவும்.
உஷ்டிராசனம்:
முதுகுப் பக்கம் நேராக இருப்பதுபோன்று முழங்காலிடவும். ஒரு கையை தூக்கி பின்னர் அதை பின்புறமாக கொண்டு வரவும். பின்பக்கமாக வளைந்து குதிங்காலை தொடவும். இதுபோன்று அடுத்த கையையும் செய்யவும்.
சுப்த வஜ்ராசனம்:
கால் மூட்டு பின்பக்க வளையுமாறு நேராக அமரவும். கைகளை உடலுக்குப் பின்பக்கம் தரையில் ஊன்றவும். கைகள் தரையில் படுமாறு முழங்கைகளை மடக்கவும். முழங்கைகள் மடங்கி, முழங்கைக்கு கீழான கைகள் தரையில்படும்போது தலையை பின்பக்கமாக வளைத்து தலையால் தரையை தொடவும். கைகளை உடலின் முன்பக்கம் கொண்டுவந்து உள்ளங்கைகளை கூப்பி உயர்த்தவும். பின்னர் இயல்பு நிலைக்கு வரவும்.
சஷாங்காசனம்:
'சஷாங்' என்றால் முயல். முயலை போன்று உடலை வைத்து செய்யும் ஆசனம். முழங்கால்கள் பின்பக்கம் மடியும்வண்ணம் உட்காரவும். இரு கைகளையும் தலைக்கு மேலாக உயர்த்தி, உள்ளங்கைகள் நேராக பார்க்கும்படி வைக்கவும். முகங்குப்புற குனிந்து உள்ளங்கைகளால் தரையை தொடவும்.
உத்தானபாதாசனம்:
தரையில் மல்லாந்து படுக்கவும். கைகளை உடலை ஒட்டி நீட்டி வைக்கவும். உள்ளங்கைகள் தரையில் படட்டும். பின்னர் முட்டியை மடக்காமல் கால்களை 45 பாகை (டிகிரி) அளவுக்கு உயர்த்தவும். முடிந்த வரைக்கும் இந்த நிலையில் இருந்து பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பவும்.
சர்வாங்காசனம்:
தரையில் மல்லாந்து படுத்து, மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு கால்களை உயர்த்தவும். உடலின் பின்புறத்தை தரையிலிருந்து உயர்த்தவும். கால்களை மெல்ல நீட்டி, உடலில் எடையானது கழுத்து, தோள்பட்டை மற்றும் கைகளின் மேற்பக்கத்தில் விழுமாறு செய்யவேண்டும். முகத்தின் நாடி, நெஞ்சில் பதியுமாறு வைத்து, முதுகு, கால்கள் நெடுங்குத்தாக இருக்குமாறு செய்யவும்.