ராஜ்யசபா எம்.பி. தேர்தல்... நாளை வேட்பு மனுதாக்கல்... அதிமுக, திமுகவில் அதிர்ஷ்டம் யாருக்கு?

Rajya mp election for 6 seats in TN, filing of nomination starts tomorrow

by Nagaraj, Jun 30, 2019, 21:05 PM IST

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு வரும் 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. திமுக, அதிமுகவில் வேட்பாளர்கள் யார்? யார்? என்ற அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக ராஜ்யசபா எம்.பி.க்கள் மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், ரத்தினவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகிய 5 பேரின் பதவிக்காலம் வரும் 24 ந்தேதியுடன் முடிவடைகிறது. திமுகவைச் சேர்ந்த கனிமொழியின் பதவிக் காலமும் முடிவடைய இருந்த நிலையில் அவர் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆகிவிட்டார். இதனால் தமது ராஜ்யசபா எம்.பி. பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்து விட்டார்.

இதனால் இந்த 6 எம்.பி. இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 26-ந்தேதி வெளியிடப்பட்டது. அதற்கான வேட்புமனுத்தாக்கலும் நாளை தொடங்குகிறது.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஜூலை 8-ந்தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 9-ந்தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜூலை 11ந்தேதி கடைசி நாளாகும்.


இந்த 6 இடங்களில், சட்டப்பேரவையில் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 3 இடங்கள் கிடைப்பது உறுதி. இதனால் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்புள்ளது. ஒரு வேளை போட்டி இருக்கும் பட்சத்தில் ஜூலை 18 ந்தேதி தேர்தல் நடைபெறும். அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இந்நிலையில் திமுக, அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி.க்களாக யார் ? யார்? தேர்வாக உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. அதில் வைகோவே தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியாக தெரிகிறது. மற்ற 2 இடங்களில் திமுகவே போட்டியிடுமா?அல்லது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்காக காங்கிரசுக்கு ஒரு இடம் விட்டுக் கொடுக்கப்படுமா? என்ற நிலை இதுவரை உள்ளது. இதனால் திமுகவில் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது.

அதிமுக கூட்டணியில், ஏற்கனவே ஒப்பந்தம் செய்தபடி பாமகவுக்கு ஒரு இடம் கொடுக்கப்படுமா? என்ற சந்தேகம் இன்னும் நிலவுகிறது. ஏனெனில் பாமகவுக்கு ஒதுக்க அதிமுக மூத்த நிர்வாகிகளில் பலரும் எதிர்ப்பு காட்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுகவிலும் குழப்பம் தான் நிலவுகிறது.


இந்நிலையில் நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் நிலையில், இரு கட்சிகளும் வேட்பாளர்களை நாளை அறிவிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

குஜராத் ராஜ்யசபா இடைத்தேர்தல் சர்ச்சை; உச்ச நீதிமன்றம் தலையிட தேர்தல் ஆணையம் எதிர்ப்பு

You'r reading ராஜ்யசபா எம்.பி. தேர்தல்... நாளை வேட்பு மனுதாக்கல்... அதிமுக, திமுகவில் அதிர்ஷ்டம் யாருக்கு? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை