போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிளை செருப்பால் அடித்த டி.ஆர்.எஸ். பெண் கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.
சமீப காலமாக நாடு முழுவதும் ஆளும் கட்சி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிரிக்கெட் பேட்டால் நகராட்சி அதிகாரியை தாக்கிய எம்எல்ஏ, சுங்கச்சாவடி தகராறில் துப்பாக்கியால் சுட்ட எம்.பி.யின் செக்யூரிட்டி, போதையி்ல் துப்பாக்கி டான்ஸ் ஆடிய எம்எல்ஏ என்று பல செய்திகளை படித்திருப்பீர்கள். அந்த வரிசையில் இதுவும் ஒன்று.
தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் டிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. ஐதராபாத்தில் இந்த கட்சியின் பெண் கவுன்சிலரும், மவுலா அலி பெண்கள் கூட்டு நடவடிக்கை குழு தலைவருமாக சையத் மோமூத்தா பேகம் உள்ளார். இவரும், இவரது கணவர் மற்றும் உறவினர் ஒருவருமாக மோட்டார் பைக்கில் 3 பேர் சென்றுள்ளனர். அப்போது போக்குவரத்து காவலர் முகமது முசாபர், போக்குவரத்து விதிகளை மீறி பைக்கில் சென்ற மூவரையும் கேமராவில் படம் பிடித்துள்ளார்.
இதை பார்த்ததும் மூவரும் வண்டியை நிறுத்தி விட்டு, அவருடன் தகராறு செய்தனர். அப்போது வாக்குவாதம் முற்றவே, பேகம் தனது காலில் கிடந்த செருப்பை எடுத்து காவலர் முசாபரை அடித்தார். மேலும், அந்த மூவரும் சேர்ந்து முசாபரிடம் இருந்த கேமராவையும் பறித்தனர். அந்த கேமரா, போக்குவரத்து விதிமீறல்களை படம் எடுப்பதற்காகவே காவல்துறையில் தரப்பட்டது.
இந்த சம்பவம் காவல் துறையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சையத் மோமூத்தா பேகம் மற்றும் அவரது கணவர் உள்பட மேலும் மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.