காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், தமிழகத்தின் மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், கடைசியாக கடந்த ஜூனில் டெல்லியில் நடைபெற்றது. அப்போது, தமிழகத்திற்கு காவிரியில் ஜூ்ன் மாதம் வரை திறந்து விட வேண்டிய 31.24 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட கார்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. கடந்த மே மாதத்திற்குரிய 9.19 டிஎம்.சி தண்ணீரை திறந்து விட ஆணையம் உத்தரவிட்டு, இவ்வளவு நாட்களாகியும் கர்நாடக அரசு இதுவரை கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றும் புகார் கூறியது.
இதனால், மேட்டூர் அணையை திறக்க முடியாமல் குறுவை சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன், ஜூலை மாதத்திற்குரிய நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இதையடுத்து, தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் 40.43 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்பதால், உடனடியாக தண்ணீர் திறக்க முடியாது என்றும் கர்நாடக அரசு அப்போது கூறியது.
இதன்பின், கடந்த வாரம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து, கர்நாடக அரசு, அம்மாநில அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர்(கேஆர்எஸ்) அணையில் இருந்து வினாடிக்கு 355 கன அடியும் திறந்து விட்டது.
இந்நிலையில், தற்போது குடகுமாவட்டத்தில் பாகமண்டலா, சோம்வார்பேட்டை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதையடுத்து, கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. ஜூலை 1ம் தேதி இந்த அணைக்கு வினாடிக்கு 771 கன அடி நீர்வரத்து இருந்தது. நேற்று மாலை அணைக்கு வினாடிக்கு 2907 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டியது.
அணையின் மொத்த உயரம் 124 அடிதான். இதனால், அணையில் இருந்து நேற்று மாலை வினாடிக்கு 5064 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதே போல், கபினி அணைக்கு நேற்று மாலை நிலவரப்படி 1315 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், வினாடிக்கு 2500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது காவிரியில் தண்ணீர் அதிகமாக வரத் தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு விரைவில் இந்த தண்ணீர் வந்து சேரும். கர்நாடக அணைகளில் தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரித்தால், அதன் மூலம் மேட்டூர் அணையில் விரைவில் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.