இந்த ஆண்டு முதல் மண்டல , மகர பூஜை காலத்தில் சபரிமலைக்கு பக்தர்கள் ஹெலிகாப்டரில் செல்ல ஏர் டாக்சி சேவை அறிமுகமாகிறது.
கேரள மாநிலத்தின் பத்தனம் திட்டை மாவட்டத்தில் மலை நடுவே பம்பை நதிக் கரையில் அமைந்துள்ளது புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலமான சபரிமலை ஐயப்பன் கோயில். ஆண்டுதோறும் கார்த்திகை,மார்கழி மாதங்களில் நாடு முழுவதும் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க வருவர். இந்த மண்டல, மகர விளக்கு காலத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் வருகை தருவதால், மலைப்பாதையில் வாகன நெரிசலில் சிக்கித் தவிப்பது வழக்கம். வயதான மற்றும் வசதி படைத்த பக்தர்கள் பலர் 'டோலி' மூலம் சபரிமலைக்கு பயணிப்பதும் உண்டு.
இதனால் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை தேவை என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்னரே பம்பை அருகே நிலக்கல்லில் ஹெலிபேடும் தயாராகி விட்டாலும், தனியார் நிறுவனங்கள் ஹெலிகாப்டர் இயக்க முன் வந்த போதும் அனுமதி கிடைப்பது தாமதமாகிவிட்டது.
இந்நிலையில் சபரி சர்வீஸ் என்ற நிறுவனம் இந்த ஆண்டு முதல் மண்டல , மகர விளக்கு சீசன் காலத்தில் ஹெலிகாப்டர் ஏர் டாக்சி சேவையை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 17-ந் தேதி முதல் ஜனவரி 16-ந் தேதி இந்த சேவை தொடங்குகிறது. கொச்சின் அருகிலுள்ள காலடி முதல் பம்பை அருகிலுள்ள நிலக்கல் வரை தினசரி 6 முறை ஏர் டாக்சி பறக்க உள்ளது. ஒரு முறை 4 பேர் ஹெலிகாப்டரில் செல்லலாம். கொச்சி விமான நிலையத்திலிருந்து காலடிக்கு பக்தர்கள் காரில் அழைத்துச் செல்லவும், நிலக்கல்லில் இருந்து சன்னிதானம் வரை பக்தர்களை வழிகாட்டி அழைத்துச் செல்ல கைடு வசதியையும் சபரி சர்வீஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
சபரிமலைக்கு ஹெலிகாப்டரில் பறக்க, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரே கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் எவ்வளவு? என்பது பற்றிய அறிவிப்பை மட்டும் ஹெலிகாப்டர் நிறுவனம் இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனங்கள் ரத்து; புதிய திட்டம் தயார்