அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் தகுதி நீக்கம் - கர்நாடக சபாநாயகர் அதிரடி

Karnataka assembly speaker disqualifies another 14 more rebel MLAs

by Nagaraj, Jul 28, 2019, 13:00 PM IST

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி காட்டியுள்ளார். ஏற்கனவே 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.


கர்நாடக அரசியலில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் குமாரசாமி அரசு மெஜாரிட்டி இழந்து கவிழ்ந்தது. அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்காமல், அவர்களுக்கு கடைசி வரை காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் மீண்டும் கட்சிக்கு திரும்ப அவகாசம் கொடுத்தும், அவர்கள் பிடிவாதமாக இருந்து ஆட்சியை கவிழ்த்து விட்டனர்.


இதனால், ஆட்சியைக் கவிழ்க்க காரணமாக இருந்த அதிருப்தி எம்எல்ஏக்களை பழி வாங்க முடிவு செய்த இரு கட்சிகளும் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டன.ஏற்கனவே சபாநாயகரிடம் கொடுத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் இந்த தகுதி நீக்கம் நடவடிக்கை ஒட்டுமொத்த அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது பாய்ந்துள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் ஜர்கி கோலி, மகேஷ் குமட்டஹல்லி மற்றும் சங்கர் ஆகிய 3 பேரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்திருந்தார். மற்றவர்கள் மீதான நடவடிக்கை குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்திருந்தார்,


இந்நிலையில் நாளை கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இன்று, மேலும் 14 எம்எல்ஏக்களின் பதவியை பறித்து சபாநாயகர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் 11 எம்எல்ஏக்கள், மஜத கட்சியின் 3 எம்எல்ஏக்கள் மொத்தம் 14 பேரும் இன்று முதல் தகுதி நீக்கம் செய்யப்படுவதாகவும், இந்த சட்டப்பேரவையின் ஆயுள் காலம் முடியும் வரை தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என்றும் சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.


இதனால் பாஜகவில் சேர்ந்து அமைச்சராகி விடலாம் என்ற கனவில் இருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலரின் எண்ணத்தில், பழிக்குப் பழி வாங்கும் வகையில் காங்கிரசும், மஜதவும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டன. மந்திரி பதவி ஆசையால் இப்போது எம்எல்ஏ பதவியும் பறிபோய், எஞ்சிய 4 வருடத்துக்கு தேர்தலில் நிற்க முடியாத சோகத்துக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆளாகியுள்ளனர். மும்பையில் இதுவரையிலும் சொகுசாக தங்கியிருந்த அதிருப்தியாளர்கள் ஓட்டலை காலி செய்து விட்டு பெங்களூருவுக்கு இனி வெறுங்கையுடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து, எம்எல்ஏ பதவி பறிபோன 17 பேரும் இனி நீதிமன்றத்தை அணுகலாம். ஆனால், அதில் அவ்வளவு எளிதில் சாதகமான தீர்ப்பு வருமா? என்பதும், விரைவாக தீர்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான். ஏனெனில் ஏற்கனவே சபாநாயகர்களின் தீர்ப்புக்கு எதிராக நீதிமன்றங்கள் பெரிதாக இதுவரை தீர்ப்பு வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் சமீபத்தில் தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் தகுதி நீக்கம் - கர்நாடக சபாநாயகர் அதிரடி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை