தமிழ்நாட்டில் ஆபரேஷன் லோட்டஸ் அதிமுகவை உடைக்க பாஜக திட்டமா?

Bjp plans operation lotus in tamilnadu, will admk government fall?

by எஸ். எம். கணபதி, Jul 28, 2019, 13:09 PM IST

தமிழ்நாட்டிலும் கால் பதிப்பதற்காக பாஜக, தனது ‘ஆபரேஷன் லோட்டஸ்’ வேலையை விரைவில் துவங்கவிருக்கிறது. இதில், அதிமுகவை உடைக்கும் திட்டமும் இருக்கலாம் என்று தெரிய வருகிறது.


நாடாளுமன்றத் தேர்தலில் 303 இடங்களை வென்று, அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் பலமான ஆட்சி அமைந்து விட்டதாலும், எதிர்க்கட்சிகள் பெரும் தோல்வியை சந்தித்திருப்பதாலும், எதிர்க்கட்சிகளை பாஜக கண்டுகொள்ளாமல் விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக தேர்தலில் வென்ற பிறகும் எதிர்க்கட்சிகளை ஓட, ஓட விரட்டுவதிலேயே பாஜக குறியாக உள்ளது.


பிரதமர் மோடி பதவியேற்பதற்கு முன்பே மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் என்று ஏராளமானோரை பாஜக இழுத்தது. அதே போல், கோவாவில் பாஜக ஆட்சியில் இருந்த போதிலும், தேவையே இல்லாமல் எதிர்க்கட்சியான காங்கிரசில் இருந்து 10 எம்எல்ஏக்களை இழுத்தது. அங்கே 13 எம்எல்ஏக்களை கொண்டிருந்த காங்கிரஸ், இப்போது வெறும் 3 எம்எல்ஏ கட்சியாக சுருங்கி விட்டது.

 


அடுத்ததாக, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்-மஜத  கூட்டணியில் 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். அவர்களி்ல 13 பேர் காங்கிரஸ். 3 பேர் மதசார்பற்ற ஜனதா தளம். இந்த 16 பேர் தவிர, 2 சுயேச்சைகளும் பாஜகவுக்கு ஆதரவாக மாறினர். இதனால், அங்கு குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி ஏற்படுத்தப்பட்டு விட்டது.


இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி விரைவில் கவிழ்க்கப்படும் என்று அம்மாநில பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். இதே போல், ராஜஸ்தான் சட்டசபையிலும் அங்குள்ள காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று பாஜகவினர் பேசி வருகின்றனர்.


இப்படி ஒவ்வொரு மாநிலமாக எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களை கபளீகரம் செய்யும் பாஜக, அடுத்ததாக தமிழ்நாட்டை குறிவைத்திருக்கிறது. இங்கு அக்டோபரில் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ வேலையை பாஜக ஆரம்பிக்கும் என்று அக்கட்சி வட்டாரங்களி்ல் பேசப்படுகிறது. இது குறித்து பாஜக பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். அவர் கூறுகையில்...
2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தேமுதிக, மதிமுக, பாமக போன்ற சாதாரண கட்சிகளுடன் கூட்டணி வைத்த போது கூட, பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. குறிப்பாக சொன்னால், அந்த தேர்தலில் கோவை தொகுதியில் வெறும் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் பாஜகவின் சி.பி.ஆர். தோற்றார். ஆனால், அவரே இந்த முறை ஒன்றே முக்கால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளரிடம் தோற்றிருக்கிறார்.


இத்தனைக்கும் கோவை அதிமுகவின் கோட்டை என்றும், அங்கு 3 அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றும், அதனால் பாஜக எளிதில் வெல்லும் என்றும் தேர்தலுக்கு முன்பு பெரிதாக பேசப்பட்டது. ஆனாலும் இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு அலை கடுமையாக இருந்ததுதான். இதை பாஜக மேலிடம் புரிந்து கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களுக்கு அரசியலே தெரியவில்லை. அவர்கள் மக்களின் கோபத்தை தணிப்பதற்கு முயற்சிக்காமல் மேலும்மேலும் அதிகரிக்கச் செய்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொண்டது. அதனால், பாஜக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் யாரையும் பேசவே விடாமல் வாய்ப்பூட்டு போட்டுள்ளது.


மோடி எதிர்ப்பு அலையை மாற்றுவதற்கு மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி மக்களிடம் பாசிட்டிவ்வாக கொண்டு செல்ல வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு எதிராக எந்த விஷயத்திலும் பேசக் கூடாது என்றும் அதிமுகவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், 10 சதவீத இடஒதுக்கீடு, முத்தலாக் மசோதா போன்றவற்றில் மாற்று கருத்து சொல்வோம் என்று அதிமுக தலைமை கூறியுள்ளது. இது பாஜகவுக்கு எதிரான மக்கள் நிலைப்பாட்டை தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் என்பதால், விரைவில் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ திட்டத்தை கையில் எடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.


இதன் ஆரம்பம்தான், மக்களவையில் அதிமுகவின் ஒரே உறுப்பினரான ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார், கட்சிக் கொள்கையை மீறி முத்தலாக் மசோதாவை ஆதரித்தது. அவர் அப்படி பேசுவதற்கு 2 நாள் முன்பாகத்தான் ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் அமித்ஷாவை மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார் என்பதை கவனிக்க வேண்டும். எனவே, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள், பாஜகவில் விரைவில் இணைவார்கள். இதனால், அதிமுக ஆட்சி கவிழும்.


அதன்பிறகு, ரஜினி தனிக்கட்சி தொடங்குவார். அந்த கட்சியுடன் பாஜக தேர்தல் உடன்பாடு வைத்து கொள்ளும். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆதரவு அதிமுகவினர் மோதினால், அவர்கள் மீதான வழக்குகள் எல்லாம் விரைவுபடுத்தப்படும். சட்டசபைத் தேர்தலின் போது, ரஜினி அணிக்கும், திமுக அணிக்கும் இடையேதான் போட்டி என்று கொண்டு வரப்படும்.


இவ்வாறு அந்த பாஜக பிரமுகர் தெரிவித்தார். ஆனால், இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அதிமுகவின் சமீப கால நடவடிக்கைகளும் இருக்கின்றன. எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து புன்னகையுடன் போஸ் கொடுத்தாலும், அவர்களுக்கு இடையே யார் செல்வாக்கு படைத்தவர் என்ற அதிகாரப் போட்டி கடுமையாகவே உள்ளது.


மக்களவையில் முத்தலாக் மசோதாவை முழுமையாக வரவேற்று ஆதரித்து ரவீந்திரநாத் பேசியதில் எடப்பாடி தரப்புக்கு உடன்பாடில்லை. அதனால்தான், அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாகவே, ‘‘ரவீந்திரநாத் பேசியது அவரது கருத்து, கட்சியின் கருத்தை மாநிலங்களவையில் பிரதிபலிப்போம்’’ என்று கூறியிருக்கிறார். அதே போல், அமைச்சர் ராஜேந்திரகுமார் இத்தனை நாட்களாக, ‘‘எல்லாம் மேலே இருக்கிறவர் பார்த்துக் கொள்வார், மோடி எங்க டாடி’’ என்றெல்லாம் வசனம் பேசி வந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கோட்சேவை, கமல் விமர்சித்த போது, பாஜகவினர் கூட பெரிய எதிர்ப்பு காட்டவில்லை. அதேசமயம், ராஜேந்திர பாலாஜி, பாஜக கட்சிக்காரர் போல் கொந்தளித்தார்.


ஆனால், இப்போது அவர் பேச்சிலேயே மாற்றம் தெரிகிறது. விரைவில் எடப்பாடி ஆட்சி கவிழும் என்று வேலூரில் ஸ்டாலின் பேசியதற்கு ராஜேந்திர பாலாஜி பதில் கொடுத்துள்ளார். அதாவது, ‘‘குமாரசாமியை போல் நாங்கள் ஒன்றும் ஏமாந்தவர்கள் அல்ல, நாங்க ரொம்ப மோசமானவங்க’’ என்று கூறியிருக்கிறார்.


அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ‘‘சசிகலாவுடன் இணைந்து பணியாற்றிய குறிப்பிட்ட காலத்தில் பயன் இருந்தது. அவரை விமர்சிக்க முடியாது. அவர் சிறையில் இருந்து வெளியே வந்தால், அதிமுகவுக்கு அவர் தலைமை ஏற்பாரா என்பதை அப்போதுதான் சொல்ல முடியும்’’ என்று கூறியுள்ளார். அதனால், சசிகலா குடும்பத்திற்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற அதிமுக நிலைப்பாட்டில் மாற்றம் தெரிகிறது.


இது போன்ற அரசியல் நகர்வுகளை வைத்து பார்க்கும் போது தமிழகத்தில் விரைவி்ல் அமித்ஷா ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

You'r reading தமிழ்நாட்டில் ஆபரேஷன் லோட்டஸ் அதிமுகவை உடைக்க பாஜக திட்டமா? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை