கர்நாடகாவில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராகி நாளை நம்பிக்கை வாக்கு கோர உள்ளார்.இந்நிலையில் ஒரு நாள் முன்னதாக, மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏக்களை சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடியாக தகுதி நீக்கம் செய்துள்ளார். இதனால் எடியூப்பா, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வெல்வது உறுதி என்றாலும், சபாநாயகரின் அவசர முடிவுக்கும் பல காரணங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வீழ்ந்தது. இதைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். சட்டப்பேரவையிலும் நாளை நம்பிக்கை வாக்கு கோர உள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெல்வது உறுதி என்றாலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. நாளை சட்டப்பேரவை கூட்டத்தில் கூட இந்த எம்எல்ஏக்கள் பங்கேற்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஒரு நாள் முன்னதாகவே சபாநாயகர் ரமேஷ்குமார் தனது முடிவை இன்று அறிவித்துவிட்டார். எஞ்சியிருந்த 14 அதிருப்தி எம்எல்ஏக்களின் பதவியையும் பறித்து, இடைத்தேர்தலிலும் நிற்க முடியாத அளவுக்கு தடையை ஏற்படுத்திவிட்டார். இதனால் அதிருப்தி குரல் கொடுத்த 17 பேரின் பாடுதான் இப்போது படுதிண்டாட்டமாகி விட்டது. ஆனால் சபாநாயகர் எடுத்த இந்த முடிவால், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பாவுக்கு சிக்கல் தீர்ந்தது என்றே கூறலாம்.
சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 எம்எல்ஏக்களில், இப்போது17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எண்ணிக்கை 207 ஆக குறைந்துள்ளது. இதனால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 104 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும். பாஜக வசமோ 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். சுயேட்சை ஒருவரின் ஆதரவும் உள்ளதால் எடியூரப்பாவுக்கு சிக்கல் இல்லை என்றாகிவிட்டது.
இதனிடையே, சபாநாயகர் ரமேஷ்குமார் அவசர, அவசரமாக இன்று இந்த பதவி பறிப்பு நடவடிக்கை எடுத்ததற்கும் ஒரு பின்னணி காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 3 பேரை தகுதிநீக்கம் செய்திருந்த சபாநாயகர், மீதமுள்ள 14 எம்.எல்.ஏ-க்கள் மீது விரைந்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனால் தகுதிநீக்க நடவடிக்கையை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில், சபாநாயகர் மீது சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர உள்ளதாக பாஜக தரப்பில் செய்திகள் வெளியாகின. மேலும் புதிய சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த போப்பையா தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது.
இது தொடர்பாக ஆலோசிக்க, பெங்களூருவில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாகவும் இருந்தது.
இதனாலேயே சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று காலையிலேயே அவசரமாக செய்தியாளர்களை சந்தித்து, எஞ்சியிருந்த 14 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துவிட்டார். தகுதி நீக்கம் தொடர்பான சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்ற முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், ரமேஷ் குமார் இந்த முடிவை எடுத்துள்ளார். இதன் மூலம் அதிருப்தி எம்எல்ஏக்களை காப்பாற்ற பாஜக எடுக்க முயன்ற முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு தனது அதிகாரத்தை நிரூபித்து விட்டார் என்றே கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் சபாநாயகர் ரமேஷ்குமாரின் பதவி ஓரிரு நாளில் பாஜகவால் பறிபோய்விடும் என்பதும் நிச்சயமாகி விட்டது. பதவி, பணம் ஆசையால் அடிக்கடி கட்சி மாறும் எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் ரமேஷ்குமாரின் இந்த அதிரடி நடவடிக்கை ஒரு பாடமாக அமையும் என்பது மட்டும் நிச்சயம். இதைத் தான் சில நாட்களுக்கு முன்னர் அவரே, பதவி, பணத்தையே பிரதானமாக கருதும் அரசியல்வாதிகள் மனிதர்களே இல்லை என்று கூறி, தனது சபாநாயகர் அதிகாரத்தால் தக்க பாடம் புகட்டுவேன் என்றும் கூறியிருந்தார். அதனை இப்போது கடைசி நேரத்தில் நிரூபித்தும் விட்டார்.