முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை எதிர்ப்பது தொடர்பாக காஷ்மீர் தலைவர்கள் மெகபூபா முப்திக்கும், உமர் அப்துல்லாவுக்கும் இடையே ட்விட்டரில் கடும் மோதல் ஏற்பட்டது.
முஸ்லீம் மதத்தினர் மூன்று முறை தலாக் சொல்லி, விவகாரத்து செய்வதை குற்றமாக்கும் வகையில், முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் முஸ்லீம் ஆண்களை சிறைக்கு தள்ளுவதற்கு தவறாக பயன்படுத்தப்படும் என்றும், இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் மசோதாவை எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தனர்.
இதே போல், காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி சயீத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்களும், முத்தலாக் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘உச்சநீதிமன்றமே முத்தலாக் தடைச் சட்டத்தை செல்லாது என்று அறிவித்த பின்பு, மீண்டும் அதை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. முஸ்லீம் ஆண்களை தண்டிப்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது. நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?’’ என்று பதிவிட்டார்.
இதையடுத்து, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, ‘‘முப்திஜி, உங்கள் கட்சி உறுப்பினர்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பதை கேட்டு விட்டு, இந்த கருத்தை பதிவிட்டிருக்க வேண்டும். சட்டத்தை நிறைவேற்றுவதற்கு வசதியாக வெளிநடப்பு செய்து விட்டு, அதன்பிறகு இந்த சட்டம் தேவையா என்று கேட்கக் கூடாது’’ என்று ட்விட்டரில் பதில் போட்டார்.
இதைப் பார்த்த மெகபூபா முப்தி, ‘‘இதை சொல்ல உங்களுக்கு அருகதை இல்லை. 1999ல் பாஜக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்த சைபுதீன் சோஸை கட்சியில் இருந்து நீக்கியவர்தானே நீங்கள்?’’ என்று காட்டமாக பதில் போட்டார்.
இதற்கு உமர் அப்துல்லா, ‘‘இருபது வருஷங்களுக்கு முன்பு நடந்ததை இப்போது சொல்லி சமாளிக்கிறீர்கள். இதிலிருந்தே உங்களுடைய இப்போதைய இரட்டை வேடம் வெளிப்பட்டு விட்டது’’ என்று பதிலுக்கு ட்விட் செய்தார். இப்படியாக இருவரும் நேற்று ட்விட்டரில் வார்த்தைப் போர் புரிந்தனர்.
'முத்தலாக் மசோதா ; அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடு' - கனிமொழி கடும் விமர்சனம்