காபி டே நிறுவனங்களின் உரிமையாளரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியுள்ளது. 36 மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் மங்களூரு நேத்ராவதி ஆற்றில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கபே காபிடே என்ற பிரபல நிறுவனத்தை கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தா நடத்தி வருகிறார். இவர் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் மாளவிகாவின் கணவர் ஆவார்.நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் காபி டே நிறுவனங்களை பல ஆண்டுகளாக சித்தார்த்தா நடத்தி வந்தார். பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் காலை காரில் புறப்பட்டுச் சென்ற சித்தார்த்தா, மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் இறங்கி நடைப்பயிற்சி செய்து விட்டு வருவதாக டிரைவரிடம் கூறி விட்டு சென்றுள்ளார்.
அதன்பிறகு, நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை. இதனால் அவருடைய செல்போனுக்கு கார் டிரைவர் போன் செய்த போது ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது தெரிய வந்தது. இதனால் பதறிப் போன டிரைவர், சித்தார்த்தாவின் குடும்பத்தினருக்கு போனில் தகவல் தெரிவித்து விட்டு, போலீசிலும் புகார் செய்தார்.
சித்தார்த்தாவை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார், அவரை யாரும் கடத்திச் சென்று விட்டார்களா? வேறு ஏதேனும் முடிவுக்கு வந்திருப்பாரோ என்று பல்வேறு கோணங்களில் விசாரணையும் நடத்தினர்.
இதற்கிடையே நேத்ராவதி ஆற்றில் குதித்து மாயமாகி இருக்கலாம் என்ற சந்தேகமும் வந்தது. இதனால் நேற்று அதிகாலை முதல் படகுகள் மூலம், ஆற்றில் தேடுதல் வேட்டை நடந்தது. சித்தார்த்தாவை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள், 100 போலீசார், 50 நீச்சல் வீரர்கள், 50 உள்ளூர் பிரமுகர்கள் என 300 -க்கும் மேற்பட்டவர்கள் 30 படகுகளில் தேடி வந்தனர்.
இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோவர் கிராப்ட், ஹெலிகாப்டர் மற்றும் படகு மூலம் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டது.இந்நிலையில் இன்று அதிகாலை சித்தார்த்தாவின் சடலம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.
கடந்த சில தினங்களுக்கு முன் தனது நிறுவன ஊழியர்களுக்கு சித்தார்த்தா ஒரு கடிதம் எழுதியிருந்ததும் நேற்று வெளியாகியிருந்தது. அதில், தாம் தொழிலில் தோல்வி அடைந்து விட்டதாகவும், எவ்வளவோ முயன்றும் மீளமுடியவில்லை என்று சித்தார்த்தா குறிப்பிட்டிருந்தார். மேலும் அனைத்து பிரச்னைகளுக்கும் தாம் மட்டுமே பொறுப்பு என்ற ரீதியில் அவர் எழுதியிருந்த கடிதம் மூலமும் தற்கொலை செய்திருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
நிறைய போராடி விட்டேன்; சித்தார்த்தா எழுதி வைத்த உருக்கமான கடிதம்