தமிழக காவல் துறையில் கடந்த 35 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளை வகித்த டிஜிபி எஸ்.ஆர்.ஜாங்கிட் இன்று ஓய்வு பெறுகிறார். முறுக்கு மீசையுடன், தனது துணிச்சலான மற்றும் அதிரடி நடவடிக்கைகளால் ரவுடிகளை வேட்டையாடியது, வட மாநில கொள்ளைக் கும்பலை கூண்டோடு ஒழித்தது, ஜாதிக் கலவரங்களை கட்டுப்படுத்தியது என பல்வேறு புகழுக்குச் சொந்தக்காரர் தான் டிஜிபி ஜாங்கிட்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த எஸ்.ஆர். ஜாங்கிட், ஐ.பி.எஸ் அதிகாரியாக 1985-ல் தேர்வு பெற்று, நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றார்.
1990-களில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரம் அடிக்கடி வெடித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி, கோமதிநாயகம் தலைமையிலான விசாரணை கமிஷன், துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,யாக, ஜாங்கிட்டை பணியமர்த்த வேண்டும் என பரிந்துரை செய்தது. இதையடுத்து, அம்மாவட்டத்தில் தாம் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் ஜாதிக் கலவரத்தை ஒடுக்கினார். இவருடைய ஐடியாப்படி தான் சாதித் தலைவர்களின் சிலைகளுக்கு இரும்புக் கூண்டு அமைக்கப்பட்டது. எந்தப் பிரச்னையானாலும் அதனை இவர் அணுகும் விதமே அலாதியானது. இவரது கம்பீரமும், தோரணையுமே அடங்காதவர்களையும் அடங்கச் செய்து விடும்.
மதுரை, நெல்லை, தஞ்சாவூர் சரகங்களில் டி.ஐ.ஜி.,யாகவும், நெல்லை, மதுரை மாநகரங்களில் கமிஷனராகவும் ஜாங்கிட் பணிபுரிந்துள்ளார். இவர் வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக இருந்தபோது, வட மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளைக் கும்பலின் அட்டகாசம் இருந்தது. தமிழகத்தில் ஊடுருவியிருந்த பவாரியா கொள்ளைக் கும்பல், 2001-ல் கும்மிடிப்பூண்டி, எம்எல்ஏவாக இருந்த சுதர்சன் உள்ளிட்ட பலரை கொன்று கொள்ளையடித்தது. இந்தக் கும்பலைச் சேர்ந்த 13 பேரை பல மாதங்கள் ராஜஸ்தானில் முகாமிட்டு கைது செய்து அக் கும்பலை ஒழித்துக்கட்டி சபாஷ் பெற்றார். எஸ்.ஆர்.ஜாங்கிட்டின் இந்த வீரதீரச் செயலை மையப்படுத்தி தான் ‘‘தீரன் அதிகாரம் ஒன்று’’ என்ற பெயரில் திரைப்படம் படம் வெளியானது.
துப்பாக்கி சுடுவதில் வல்லவரான ஜாங்கிட் பல ரவுடிகளுக்கும் சிம்ம சொப்பை மாக திகழ்ந்தவர்.சென்னை நகரில் கூடுதல் கமிஷனர் மற்றும் புறநகர் கமிஷனராக பணிபுரிந்தபோது, அட்டகாசம் செய்து வந்த வெள்ளை ரவி, பங்க் குமார் உள்ளிட்ட பல ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தமிழக காவல் துறையில் மெச்சத்தக்க வகையில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வர், ஜனாதிபதி, பிரதமர் பெயரில் வழங்கப்பட்ட விருதுகள் பலவற்றையும் எஸ்.ஆர். ஜாங்கிட் பெற்றுள்ளார்.
ஆனாலும் திறமையான துணிச்சலான அதிகாரிகளுக்கு தமிழக அரசியல்வாதிகள் உரிய அங்கீகாரம் கொடுப்பதில்லை என்பது ஜாங்கிட்டின் விஷயத்திலும் நிரூபணமாகி விட்டது. கம்பீரமாக வலம் வந்த ஜாங்கிட்டை கடந்த சில வருடங்களாக அதிகாரம் இல்லாத பதவிகளில் அமர்த்தி முடக்கி விட்டனர்.சென்னை போக்குவரத்துக் கழக விஜிலன்ஸ் அதிகாரி என்ற சாதாரண பதவியில் அமர்த்தப்பட்ட ஜாங்கிட் 4 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடிக்க வைக்கப்பட்டார். இதனால் சமீபத்தில் ஜாங்கிட் பொங்கியெழுந்தார்.
நேரடி ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகி பொறுப்புக்கு வந்தவர்களுக்கு அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்த்தி மல் சாதாரண பதவிகளை வழங்குவதும், நேரடியாக தேர்வு பெறாமல் பதவி உயர்வு மூலம் உயர் பதவிக்கு வருபவர்களை அதிகாரம் மிக்க பதவி வழங்குவதையும் எதிர்த்து பகிரங்கமாகவே அரசுக்கு கடிதம் எழுதினார். வழக்கும் தொடரப் போவதாக அறிவித்தார். ஆனாலும் தமிழக ஆளும் அரசியல்வாதிகளும், அவர்களுக்கு ஜால்ரா போடும் அதிகாரிகளும் இதற்கெல்லாம் மசிந்து விடவில்லை.
கடைசியில் டிஜிபி என்ற அந்தஸ்தை மட்டும் கொடுத்து,சென்னை போக்குவரத்துக் கழகத்தில் இருந்து கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கு அதே விஜிலன்ஸ் அதிகாரி பொறுப்பில் தூக்கியடிக்கப்பட்டார் ஜாங்கிட். தற்போதும் அதே பதவியுடனே இன்று ஓய்வு பெறுகிறார் டிஜிபி எஸ்.ஆர் ஜாங்கிட். அவருக்கு ராயல் சல்யூட்..!