உன்னோவ் பலாத்கார வழக்குகள் டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றம் உச்ச நீதிமன்றம் உத்தரவு

by எஸ். எம். கணபதி, Aug 1, 2019, 15:52 PM IST
Share Tweet Whatsapp

உன்னோவ் பெண் பலாத்காரம் மற்றும் கார் விபத்து தொடர்பான 5 வழக்குகளை, லக்னோவில் இருந்து டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், உன்னோவில் இளம்பெண் ஒருவர், கடந்த 2017-ம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வேலை கேட்டு வந்த அந்த பெண்ணை பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண், மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீடு முன்பாக தீக்குளிக்க முயன்றார். இதனால், கடந்த ஏப்ரலில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, குல்தீப் சிங் செங்கா் கைது செய்யப்பட்டார்.

இதன்பின்னர், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, போலீஸ் காவலில் இறந்தார். இதற்கு பிறகு அந்த பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது.
இந்நிலையில், அந்த பெண், அவரது வழக்கறிஞர் மற்றும் 2 உறவினர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேபரேலியில் உள்ள உறவினரைச் சந்திக்க காரில் சென்றனர்.

அப்போது, லாரி ஒன்று இவர்கள் காரின் மீது மோதியது. இதில் உறவினர்கள் 2 பேரும் உயிரிழந்தனர், பாதிக்கப்பட்ட பெண்ணும், வழக்கறிஞரும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, இளம்பெண் பலாத்கார வழக்கு மற்றும் விபத்து ஏற்படுத்திய வழக்கு ஆகியவை சிபிஐக்கு மாற்றப்பட்டது. பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. செங்கர் தற்போது சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண்ணுடன் பாதுகாப்புக்கு செல்லாத 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு, வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து சிபிஐயிடம் கேட்டனர். சிபிஐ அறிக்கை அளிக்க அவகாசம் கோரியது. அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.

இதன்பின், பிற்பகலில் சிபிஐ இணை இயக்குனர் சம்பத் மீனா ஆஜராகி, விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கினார். இதைத் தொடர்ந்து, உன்னோவ் பலாத்காரம், விபத்து உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான 5 வழக்குகளை, லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து டெல்லியில் உள்ள நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் விபத்து வழக்கு விசாரணையை 15 நாட்களில் முடிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது. டெல்லி நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் தொடர்ச்சியாக 45 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் விருப்பப்பட்டால் வேறு எந்த மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது.

பாஜக எம்எல்ஏவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை கொல்ல முயற்சி; நாடாளுமன்றம் முன் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

READ MORE ABOUT :

Leave a reply