காஷ்மீரில் கல்வீச்சு, எதிர்ப்பு போராட்டங்கள் நடப்பதாகவும், பாதுகாப்பு படையினர் சுடுவது போன்றும் பி.பி.சி. செய்தி நிறுவனம், வீடியோக்களை வெளியி்ட்டிருக்கிறது. ஆனால், அதை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும், மசூதிகளில் தொழுகை நடக்கும் காட்சிகளையும் வெளியிட்டிருக்கிறது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் ஏற்படலாம் என்று கருதி, முன்கூட்டியே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். மேலும், ஸ்ரீநகர் உள்பட 22 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால், கடந்த 6 நாட்களில் காஷ்மீரில் முழு அமைதி நிலவுகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காஷ்மீரிலேயே முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீநகரில் பல இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றதாக ராய்ட்டர் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் வீடியோக்களை வெளியிட்டது. இதை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மறுத்தது. இந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை என்றும் அவை பொய்யாக தயாரிக்கப்பட்டவை என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ஆனால், இதற்கு பின்னர் கடந்த சனிக்கிழமையன்று பி.பி.சி. செய்தி நிறுவன பத்திரிகையாளர் அமிர் பிர்சாடா, காஷ்மீரின் ஜம்முவில் நடைபெறும் காட்சிகளை செய்தியாக வெளியிட்டிருக்கிறார். அங்கு ஆயிரக்கணக்கானோர் அமைதியாக போராட்டம் நடத்தியதாகவும், திடீரென அதில் வன்முறை வெடித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாதுகாப்பு படையினர் சுட்டதாகவும் அவர் தகவல் அளித்தார். மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசுவது, துப்பாக்கிக் குண்டு சத்தத்தின் பின்னணியில் ஆர்ப்பாட்டக்கார்கள் ஓடுவது போன்ற வீடியோ காட்சிகளையும் வெளியிட்டிருந்தார். ஜம்முவின் சவுரா பகுதிக்குள் செல்ல முடியாதவாறு மக்கள் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இன்னொரு பகுதியில் பாதுகாப்பு படையினர் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் தற்போது அரசுதரப்பில் மறுத்துள்ளனர். ஸ்ரீநகரில் போலீஸ் கமிஷனர் தில்பக் சிங் கூறுகையில், ‘‘கடந்த 6 நாட்களில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிகளில் இருந்து ஒரு புல்லட் கூட வெளியேறவில்லை. ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதிகளிலும் அமைதி நிலவுகிறது’’ என்றார். இதனிடையே, ஸ்ரீநகரில் மக்களுடன் அஜித் தோவல் உரையாடும் காட்சிகள், மசூதிகளில் தொழுகை நடக்கும் காட்சிகளை மத்திய அரசு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது.