காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷா எப்படிப்பட்டவர் என்பது நாட்டுக்கே தெரிந்துவிட்டது என நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்துள்ளார்.பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கிருஷ்ணரும் அர்ஜூனனும் போன்றவர்கள் என்றும் சென்னையில் நடந்த விழாவில் ரஜினி, ஓகோவென புகழ்ந்து தள்ளியுள்ளார்.
துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின், கடந்த இரண்டு ஆண்டுகளில் வெங்கய்யா நாயுடு, ஆற்றிய பணிகள், உரைகள், சந்திப்புகள், நிகழ்வுகளை, Listening, Learning and Leading என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு,மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரகாஷ் ஜவடேகர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் நடிகர் ரஜினிகாந்தும் இந்த விழாவில் பங்கேற்றார்.
விழாவில் பேசிய ரஜினிகாந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், பிரதமர் மோடியையும் ஆகா, ஓஹோ என புகழ்ந்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். காஷ்மீரை இரண்டாகப் பிரித்து அமித் ஷா மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டுக்குரியது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமித் ஷா ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கிருஷ்ணனும், அர்ஜுனனும் போன்று சிறப்பாக செயல்படுகின்றனர் என்று ரஜினி புகழ்ந்து தள்ளினார். மேலும் வெங்கய்யா நாயுடு பற்றி பேசிய ரஜினி சிறந்த ஆன்மீகவாதியாக திகழ்ந்தவர் தவறுதலாக அரசியலுக்கு வந்து விட்டார் என்றாலும், எப்போதும் மக்களைப் பற்றியே சிந்திப்பவர் என்றும் ரஜினி புகழ்ந்து பேசினார்.
காஷ்மீர் விவகாரத்தில் தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணியைத் தவிர பிற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷாவை ரஜினி புகழ்ந்து பேசியிருப்பது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமித்ஷா வை புகழ்ந்து பேசினர்.