முத்தலாக் தடைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முஸ்லிம்களின் மதச் சட்டப்படி, மூன்று முறை தலாக் கூறி ஒரு பெண்ணை விவாகரத்து செய்யும் நடைமுறை அந்த மதத்தினரிடம் இருந்து வந்தது. முத்தலாக் நடைமுறை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது. இதற்கு பின்னர், முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பாஜகவுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால், கடந்த முறை மோடி ஆட்சியின் போது இது அவசரச் சட்டமாக கொண்டு வரப்பட்டது. இம்முறை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், முஸ்லிம் பெண்கள்(திருமணம் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்2019 என்ற அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து சமஸ்த கேரள ஜமீயாத்துல் உலமா என்ற சன்னி முஸ்லீம்களின் அமைப்பு, ஜமீயாத் உலமா ஐ ஹிந்த் என்ற அமைப்பு மற்றும் அமீர் ரஷீத் மத்னி ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒரு மனுதாரர் சார்பில் சீனியர் வக்கீல் சல்மான் குர்ஷித் ஆஜரானார். நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் வழக்கை விசாரித்தனர். ‘‘முத்தலாக் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்பு, அதற்கு தண்டனை வழங்கும் சட்டம் கொண்டு வந்ததில் என்ன தவறு?’’ என்று நீதிபதிகள் கேட்டனர்.
இதற்கு சல்மான் குர்ஷித் கூறுகையில், ‘‘நடைமுறையில் இருந்த ஒன்றை குற்றமாக அறிவித்ததிலும், மூன்றாண்டுகள் தண்டனை விதித்ததிலும் பல விஷயங்கள் ஆராயப்படவில்லை’’ என்றார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.