திருப்பதி ஏழுமலையான் கோயிலைப் போன்று சென்னையில் ஒரு பெரிய பெருமாள் கோயிலை கட்டுவதற்கு திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வரிடம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசுவார் என்று தேவஸ்தான போர்டு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறியுள்ளார்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலை நிர்வகிக்கும் திருப்பதி-திருமலா தேவஸ்தான போர்டு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்கள் தமிழகத்தில் அதிகமாக உள்ளனர். அவர்களின் வசதிக்காக சென்னையில் ஒரு பெருமாள் கோயிலை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளோம். சென்னை தி.நகரில் தற்போது உள்ள தேவஸ்தான கோயிலை விட மிகப் பெரிய கோயிலாக கட்டுவதற்கு யோசித்து வருகிறோம். ஏற்கனவே கன்னியாகுமரியில் இப்படி ஒரு கோயிலை கட்டியிருக்கிறோம்.
இந்த கோயில் கட்டுவதற்கு தேவையான நிலம் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசிடம் கேட்கவுள்ளோம். தேவைப்பட்டால், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் பேசுவார்.
திருப்பதி கோயிலில் வி.ஐ.பி.க்கள் வசதிக்காக இருந்த மூன்று விதமான தரிசனங்களை மாற்றி, ஒரே சிறப்பு தரிசனமாக கொண்டு வந்துள்ளோம். பக்தர்கள் பலவிதமான டிக்கெட்டுகளை வாங்கி ஏமாறாமல் இருப்பதற்காக ஒரே சிறப்பு தரிசனமாக கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம், 4 மணி நேரம் காத்திருப்பதற்கு பதிலாக 2 மணி நேரம் காத்திருந்தால் போதும் என்ற நிலை வந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள திருப்பதி திருமலா தேவஸ்தான கோயில் தலைவர் கிருஷ்ணாராவ் கூறுகையில், ‘‘சென்னையில் பெரிய கோயில் கட்டுவதற்கு ஏற்கனவே ஜெயலலிதாவிடம் நிலம் கேட்டோம். அவரும் நிலம் ஒதுக்குவதாக கூறியிருந்தார். அதன்பிறகு, அந்த திட்டம் துவங்கப்படவில்லை. தற்போது மீண்டும் தமிழக அரசிடம் நிலம் உள்ளிட்ட உதவிகளை கோருவதற்கு முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.