கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
கர்நாடக காங்கிரசில் முக்கியமானவர் டி.கே.சிவக்குமார். ஏற்கனவே சித்தராமையா முதல்வராக இருந்த போது, நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தார். சிவக்குமார் பெரும் தொழிலதிபர். குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசின் அகமது படேலை தோற்கடிப்பதற்கு பாஜக முயன்ற போது, அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து தனது ரிசார்ட்டில் தங்க வைத்து, அகமது படேல் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர்.
சமீபத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் தீவிரம் காட்டிய போது, அதை முறியடிக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டவரும் இதே சிவக்குமார் தான்.
ஆனால் அவருடைய முயற்சிகள் பலிக்காமல், பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது. ஆனாலும் டி.கே.சிவக்குமாரை பழி தீர்க்க, அவர் மீது மத்திய அரசு குறி வைத்து வந்தது. ஏற்கனவே குஜராத் ராஜ்யசபா தேர்தலின் போதே சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டி, டெல்லி அமலாக்கத் துறையினர் நேற்று(செப்.3) அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தி விட்டு இரவில் கைது செய்தனர்.
அவர் போலி கம்பெனிகள் நடத்தி, ஹவாலா பரிமாற்றங்களை மேற்கொண்டிருக்கிறார் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து வருமானவரித் துறை வழக்கிலும் சிவக்குமார் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. கைதான சிவக்குமாரின் உடல்நிலை சரியில்லாததால், அவரை டெல்லி ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதற்கிடையே, சிவக்குமார் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், கர்நாடகாவில் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ராம்நகரா மாவட்டத்தில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. பெங்களூருவுக்கு அருகில் உள்ள கனகபுரா பகுதியில் சிவக்குமாரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் அரசு வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அரசு பஸ்களின் மீது கல்வீசிய சம்பவங்களும் நடந்தன.
பெங்களூரு- மைசூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, கனகபுரா, இஜூர் சர்க்கிள் பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, ராம்நகரா மாவட்டத்தில் இன்று(செப்.4) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், மகாடி, ஹுலியுரு துர்கா, மாண்டியா வழியாக திருப்பி விடப்பட்டன. பல ஊர்களில் காங்கிரஸ் ெதாண்டர்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணி நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டங்களில் பாஜகவினைர கடுமையாக விமர்சித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.