காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம் : ராணுவ தளபதி வேண்டுகோள்

by எஸ். எம். கணபதி, Sep 5, 2019, 10:56 AM IST

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பொது மக்களும், பிரிவினைவாத இயக்கங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். அங்கு மீண்டும் வன்முறை ஏற்பட்டால், காஷ்மீருக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தீவிரவாதிகளுக்கு நிதியுதவி போவதை தடுக்க பாகிஸ்தான் தவறி விட்டது. குறிப்பாக, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமத் அமைப்புகளுக்கு நிதி போகிறது. இதன்காரணமாக, எப்.ஏ.டி.எப் என்ற சர்வதேச கண்காணிப்பு அமைப்பு, பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்திருக்கிறது. இதனால், தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில்தான், காஷ்மீருக்கான அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை செய்யும் போது, ராணுவப் பாதுகாப்பை சிறப்பாக செய்ய முடியும் என்று நாங்கள் அரசுக்கு உறுதியளித்தோம். இதுதான் இந்த முடிவை எடுப்பதற்கு சரியான தருணமாகும்.

இப்போது காஷ்மீரில் முழு அமைதியை ஏற்படுத்த பொதுமக்களும், பிரிவினைவாத தலைவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காஷ்மீரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டால், அது காஷ்மீருக்கு மிகவும் ஆபத்தானதாக அமையும்.
இவ்வாறு பிபின் ராவத் தெரிவித்தார்.


More India News