லேண்டர் விக்ரமுடன் திடீரென தகவல் தொடர்பு துண்டானது.. இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு

Sep 7, 2019, 06:58 AM IST

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து நிலவில் இறங்குவதற்காக பிரித்து விடப்பட்ட லேண்டர் விக்ரமுடன் திடீரென தகவல் தொடர்பு துண்டானது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். எனினும், இவ்வளவு பெரிய இலக்கை எட்டியதற்காக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

இந்திய விண்வெளிக் கழகம்(இஸ்ரோ), நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது. கடந்த ஜூலை 22ம் தேதி சந்திரயான்2, விண்ணில் ஏவப்பட்டது முதல் பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டறையில் விஞ்ஞானிகள் தினமும் 16 மணி நேரம் வேலை பார்த்தனர். சந்திரயான் சுற்றுப்பாதை, அதன் செயல்பாடுகள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

புவி வட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2, ஆகஸ்ட்2ம் தேதியன்று நிலவின் வட்டப் பாதைக்கு அனுப்பப்பட்டது. நிலவில் இறங்கும் வரை கொஞ்சம், கொஞ்சமாக அதை நெருங்கும் வகையில் அடுத்தடுத்த வட்டப்பாதைகளில் சந்திரயான் இறக்கப்பட்டது.

இதன்பின்னர், சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து, நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட லேண்டர் விக்ரம் பிரித்து விடப்பட்டது. அது நேற்று நிலவுக்கு அருகே 35 கி.மீ. தூரத்தில் உள்ள வட்டப்பாதையில் சுற்றி வந்தது. இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நிலவில் லேண்டர் விக்ரமை தரையிறக்குவதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றினர்.

இந்நிலையில், லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரில் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு(செப்.6) பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டறைக்கு வந்து விஞ்ஞானிகளுடன் காத்திருந்தார், 70 பள்ளி மாணவர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அதிகாலை சரியாக 1.38 மணிக்கு லேண்டர் விக்ரம், அதன் சுற்றுவட்டப்பாதைகளை கடந்து நிலவுக்கு 2.1 கி.மீ. தூரத்தில் இருந்தது. இதனால், விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ந்தனர். அடுத்த சில வினாடிகளில் லேண்டர் விக்ரம் நிலவில் மெதுவாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென லேண்டர் விக்ரமில் இருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டறைக்கு தகவல் துண்டித்து போனது. இதனால், பரபரப்படைந்த விஞ்ஞானிகளுடன், இஸ்ரோ தலைவர் சிவன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இதன்பின், விஞ்ஞானிகளிடம் பேசிய பிரதமர் மோடி, மனம் தளர்ந்து விடாதீர்கள். வரலாற்று சிறப்பு மிக்க முயற்சியில் மிகப்பெரிய இலக்கை எட்டியுள்ளீர்கள். இது சாதாரண விஷயமல்ல. லேண்டர் விக்ரமுடன தகவல் தொடர்பு கிடைத்து விட்டால், நாம் பல அரிய விஷயங்களை அறியலாம் என்று பாராட்டினார். தொடர்ந்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவிலும், இந்திய விஞ்ஞானிகளின் திறமைகளை கண்டு இந்தியா பெருமை கொள்கிறது. அவர்கள் எப்போதும் உறுதியாக இருப்பார்கள். பல சாதனைகளை புரிவார்கள் என்று பாராட்டினார்.

கடந்த ஜூலை 22ல் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், 48 நாட்களில் 3 லட்சத்து 84,400 கி.மீ. தூரத்தை கடந்து நிலவின் அருகே சென்றது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், லேண்டர் விக்ரமில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் கிடைக்கவில்லை. இதை எப்படி சரிசெய்வது என்று ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு 2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் தகவல் துண்டித்து போனது. தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.


Leave a reply