காஷ்மீர் பிரச்னையை தீர்க்க நான் உதவத் தயார் : டிரம்ப்

Donald Trump now willing to help resolve Kashmir issue, not mediate

by எஸ். எம். கணபதி, Sep 10, 2019, 11:33 AM IST

காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு வரலாம் என்று கருதி, அங்கு பலத்த கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரை பிரித்ததால் அங்கு இனி ஆதிக்கம் செலுத்த முடியாது என்று உணர்ந்த பாகிஸ்தான் அரசு, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக்க முயன்றது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் இது பற்றி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசினார்.

இதையடுத்து, காஷ்மீர் பிரச்னையில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்வதாக டிரம்ப் கூறினார். இதை இந்தியா உடனடியாக மறுத்தது. பாகிஸ்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு மட்டுமே இந்தியா ஒப்புக் கொள்ளும். மூன்றாவது நாட்டிற்கு இதில் வேலை இல்லை என்று இந்திய தரப்பில் கூறப்பட்டது.
இதற்கு பின்பும், காஷ்மீர் பிரச்னையில் தலையிட்டு சுமுகத் தீர்வு ஏற்படுத்த விரும்புவதாக டிரம்ப் கூறினார். அதற்கும் இந்தியதரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. இதில் வேறு யாரும் தலையிடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் டிரம்ப், காஷ்மீர் பிரச்னையைப் பற்றி பேசியுள்ளார். இப்போது அவர் மத்தியஸ்தம், தலையீடு ஆகிய வார்த்தைகளுக்குப் பதில் உதவி என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான காஷ்மீர் சண்டையை தீர்ப்பதற்கு தான் உதவத் தயாராக உள்ளதாகவும், இருநாடுகளிடமும் தனக்கு நீண்ட காலமாக நல்லுறவு இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தற்போது பதற்றம் குறைந்திருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

You'r reading காஷ்மீர் பிரச்னையை தீர்க்க நான் உதவத் தயார் : டிரம்ப் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை