குலாம் நபி ஆசாத்துக்கு காஷ்மீர் செல்ல அனுமதி.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Supreme Court allows senior Congress leader gulam nabi Aasad to visit kashmir

by எஸ். எம். கணபதி, Sep 16, 2019, 14:13 PM IST

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், காஷ்மீருக்கு செல்வதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு கடந்த ஆக.5ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக, அம்மாநிலத்தில் அசம்பாவிதங்கள் நிகழக் கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. ஆகஸ்ட் 5ம் தேதி முதல் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்பட 400க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு, பல இடங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த கட்டு்ப்பாடுகளை எதிர்த்து காஷ்மீர் பத்திரிகையாளர்கள் உள்பட பலர், சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். அதேபோல், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் தனது சொந்த மாநிலமான காஷ்மீருக்கு தான் செல்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவற்றை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு விசாரித்தது.

அப்போது குலாம் நபி ஆசாத் மனுவை விசாரித்த நீதிபதிகள், குலாம் நபி ஆசாத் அவரது மாநிலத்திற்கு செல்லலாம். ஸ்ரீநகர், பரமுல்லா, அனந்தநாக் மற்றும் ஜம்மு ஆகிய பகுதிகளுக்கு குலாம்நபி ஆசாத் செல்லலாம். அதே சமயம், அவர் ஜம்மு காஷ்மீரில் எந்த ஒரு அரசியல் நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், காஷ்மீர் தொடர்பான மனுக்கள் மீது மீண்டும் வரும் 30ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து குலாம் நபி ஆசாத் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டிற்கு நன்றி. நான் அங்கு சென்று வந்த பிறகு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வேன். தேவைப்பட்டால் நானே காஷ்மீருக்கு செல்வேன் என்று தலைமை நீதிபதி சொல்லியிருப்பது நல்ல விஷயம். காஷ்மீர் நிலைமை எப்படி போகிறது என்று பார்ப்போம் என்றார்.

You'r reading குலாம் நபி ஆசாத்துக்கு காஷ்மீர் செல்ல அனுமதி.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை