சரத்பவார் மீது அமலாக்கத் துறையினர் ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். இவர் மீது மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் ரூ.25 ஆயிரம் கோடி மோசடிகள் தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை வழக்கு தொடுத்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன் பின்பு, அவர் இப்போது ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தது. ஆனாலும், சரத்பவார் இன்று பிற்பகல் 2 மணிக்கு தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகப் போவதாக அறிவித்தார்.
இதற்கிடையே, அமலாக்கப் பிரிவு அலுவலகம் முன்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் 21ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சரத்பவார் மீது பொய் வழக்கு போட்டு அவரை முடக்க முயற்சிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், ராகுல்காந்தி ட்விட்டரில், பழிவாங்கும் அரசின் இப்போதைய குறி சரத்பவார்ஜி. சட்டமன்றத் தேர்தல் நடக்க ஒரு மாதமே உள்ள நிலையில், இந்த வழக்கு தொடுத்திருப்பது அரசியல் சந்தர்ப்பவாதத்தை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ரவுத் கூறுகையில், சரத்பவார் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பவில்லை. அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றார்.