உண்மை நிலையை கேட்கும் மனநிலையை பிரதமர் வளர்த்து கொள்ள வேண்டும் என்று மோடிக்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணிய சாமி அவ்வப்போது ஏதாவது காரசாரமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்துவார். மத்திய நிதியமைச்சராக அருண்ஜெட்லி இருந்த போதும் சரி, இப்போது நிர்மலா சீத்தாராமன் இருக்கும் போதும் சரி. அவர்களுக்கு பொருளாதாரமே தெரியவில்லை என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், சாமி எழுதிய பொருளாதாரம் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா நேற்று மும்பை பங்குச் சந்தை வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
நமது பொருளாதார நிலை வீழ்ச்சியுற்ற நேரத்தில், குறுகிய காலத் திட்டம், நடுத்தர காலத் திட்டம், நீண்ட காலத் திட்டம் என்ற பொருளாதாரக் கொள்கை அவசியமாகிறது. ஆனால், இன்று அப்படி கொள்கை இல்லை. நமது அரசு நியமித்துள்ள பொருளாதார நிபுணர்கள், உண்மை நிலையை பிரதமரிடம் எடுத்து சொல்ல பயப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். பிரதமரும் ஏழைகளுக்கு கேஸ் இணைப்பு வழங்கும் உஜவாலா திட்டம் போன்ற சிறிய திட்டங்களிலேயே முழுக் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனால், பொருளாதாரத்தை வலுப்படுத்த பன்முகத் திட்டங்கள் வேண்டும். மோடியின் அரசில் சிலர் மட்டுேம தனித்து செயல்பட முடிகிறது. எது தேவையில்லாதது என்று உண்மையை முகத்துக்கு நேராக சொல்லக் கூடியவர்களை பிரதமர் ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால், அவருக்கு அந்த மனநிலை இருப்பதாக தெரியவில்லை. உண்மையை கேட்கும் மனநிலையை அவர் வளர்த்து கொள்ள வேண்டும்.
பிரதமராக இருப்பவர் பொருளாதார மேதையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 1991ல் பிரதமராக நரசிம்மராவ் இருந்த காலத்தில், மன்மோகன்சிங்கை நிதியமைச்சராகக் கொண்டு பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்தங்களை துணிச்சலாக கொண்டு வந்தார். அந்த சீர்திருத்தங்களை கொண்டு வந்த பெருமையில் 95 சதவீதம் நரசிம்மராவுக்குத்தான் உண்டு. மறைந்த நரசிம்மராவுக்கு பாரதரத்னா பட்டம் தரப்பட வேண்டும். மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்த போது சாதித்ததை, பிரதமராக இருந்த போது சாதிக்க முடியவில்லை.
இவ்வாறு சாமி பேசினார். மேலும், பணமதிப்பிழப்பு, அவசர கோலத்தில் ஜிஎஸ்டி கொண்டு வந்தது போன்றவைகளுக்காக ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகத்தை அவர் சாடினார். வருமான வரிகளை அறவே ஒழிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதுதான் மக்களின் சேமிப்பை உயர்த்தி, பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.