எல்லையில் பாக். ட்ரோன்.. பஞ்சாபில் படைகள் குவிப்பு..

by எஸ். எம். கணபதி, Oct 8, 2019, 16:14 PM IST

பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப்பின் ஹுசைன்வாலா செக்டரில் பாகிஸ்தான் ட்ரோன் ஊடுருவியதால், அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானால் காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய முடியவில்லை. காஷ்மீரில் குழப்பம் ஏற்படுத் முடியாமல் போகவே, இந்த விஷயத்தை சர்வதேசப் பிரச்னையாக்க முயன்றது. அதிலும் தோல்வி ஏற்படவே இந்தியாவுக்குள் தீவிரவாதச் செயல்களை நடத்துவதற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தீவிரமாக முயன்று வருகிறது.

கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் செப்.16ம் தேதிக்குள்ளாக பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஆளில்லா ட்ரோன்கள் மூலம் இந்தியாவுக்குள் 8 இடங்களில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கொண்ட மூட்டைகளை வீசினர். காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்காக இதை வீசினர். இதன்பின், செப்.22ம் தேதியன்று பஞ்சாப்பில் டான் டரான் மாவட்டத்தில் காலிஸ்தான் ஜிந்தாபாத் தீவிரவாதிகள் சிலரை இந்திய ராணுவம் கைது செய்தது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஹுசைன்வாலா செக்டரில் 136வது பட்டாலியன் செக்போஸ்ட் பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று சுற்றியதை பார்த்துள்ளனர். நான்கு முறை பாக்.எல்லைக்குள் சுற்றிய ட்ரோன் ஒரு முறை இந்திய எல்லைக்குள் நுழைந்திருக்கிறது.

எனவே, இதே போல் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் ஆயுதங்களை வீசியிருக்குமோ என்று இந்திய ராணுவம் சந்தேகப்படுகிறது. இதையடுத்து, பாக்.எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப் மாவட்டங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.


Leave a reply