மக்களே புரட்சி செய்யும் காலம் விரைவில் வரும்.. நாங்குனேரி பிரச்சாரத்தில் சீமான் பேச்சு

by எஸ். எம். கணபதி, Oct 8, 2019, 16:06 PM IST

பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும். அந்த அரசியலை உணர்ந்து மக்கள் தாங்களாகவே புரட்சி செய்வார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்றத் தொகுதிகளில் வரும் 21ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நாங்குனேரியில் அதிமுக சார்பில் நாராயணனும், காங்கிரஸ் சார்பில் ரூபிமனோகரனும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

உலக வரலாற்றிலேயே பொழுதுபோக்குக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த இனம் தமிழினம்தான். மூத்த தலைவர் நல்லகண்ணுவை தோற்கடித்து விட்டு, ரஜினியை ஜெயிக்க வைக்க நினைக்கும் கூட்டத்தை என்ன செய்ய முடியும்?

இந்தியாவில் வேற எந்த மாநிலத்திலும் சினிமா இல்லையா? எதற்காக ரஜினியை கட்டாயப்படுத்தி அரசியலுக்கு வரச் சொல்கிறீர்கள். மக்களுக்கான தலைவரை தரையில் தேடுங்கள்... திரையில் தேடாதீர்கள். நான், அமைப்பு சரி இல்லை என்கிறேன் சிலர், சிஸ்டம் சரி இல்லை என்கிறார்கள் நான் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைத்தான் ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்கிறார். காவலர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று நான் சொன்னேன். ஜெகன்மோகன் ரெட்டி அதை செயல்படுத்தியுள்ளார். என்னுடைய புத்தகத்தை அவர் படித்திருக்கிறார் போல.
எங்களிடம் காசில்லை; எங்களைக் காட்டுவதற்கு ஊடகம் இல்லை. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

எனக்கென்று உள்ள தம்பி, தங்கைகளை நம்பித்தான் பேசுகிறேன். பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும் அதை உணர்ந்து மக்கள் தாங்களாகவே புரட்சி செய்வார்கள்.

இவ்வாறு சீமான் பேசினார். நாங்குனேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார், நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வென்றதால்தான் நாங்குனேரி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இது பற்றி தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்ட சீமான், யாரால் தேர்தல் வருகிறதோ அவரிடமிருந்து தேர்தல் செலவுத் தொகையை தேர்தல் ஆணையம் வசூலிக்க வேண்டும் என்றார்.


Leave a reply