14 வயது சிறுவனை கொலை செய்ய முயற்சி – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்…

by Sasitharan, Apr 10, 2021, 09:06 AM IST

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களக்காடு பகுதியில் களக்காடு போலீசார் ரோந்து சென்றுள்ளனர். அப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் 5 இளைஞர்கள் நின்றுள்ளனர். போலீசார் வருவதை கண்டு அவர்கள் அங்கிருந்து ஓட முயன்றுள்ளனர்.

போலீசார் துரத்தி சென்று அவர்களை பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில் 5 நாட்டு வெடிகுண்டுகள், 4 அரிவாள்கள் இருந்துள்ளன.

உடனே அவர்களை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் களக்காடு மற்றும் பணகுடி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த முத்துமனோ, மாதவன், சந்திரசேகர், அருள் துரை சிங் என்ற கண்ணன் 17 வயதுடைய பணகுடியைச் சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.

களக்காடு பகுதியை சேர்ந்த ஒரு 10 ஆம் வகுப்பு மாணவன், அந்த பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்துள்ளார். இதற்கு மாணவியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காதலை விடும்படி, அந்த மாணவனை பலமுறை எச்சரித்து உள்ளனர். ஆனாலும் அந்த மாணவர் அடிக்கடி மாணவியை பின் தொடர்ந்து பேசி வந்துள்ளான். இதனால் மாணவியின் உறவினர்கள் அந்த மாணவனை கொலை செய்ய முடிவு செய்து, இதற்காக களக்காடு பெத்தானியா பகுதியை சேர்ந்த 23 வயதேயான அருள்துரை சிங் என்ற கண்ணனிடம் பணம் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அவரது நண்பர்களான 4 பேரும் அந்த மாணவனை தீர்த்து கட்ட வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள்களுடன் சென்ற போதுதான் கையும்களவுமாக போலீசில் சிக்கி உள்ளனர்.

இதையடுத்து கொலை செய்ய அனுப்பிய நபர் மற்றும் நாட்டு வெடிகுண்டை தயாரித்த கொடுத்தவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காதலுக்காக 10 ஆம் வகுப்பு மாணவனை கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோந்து சென்று குற்றம் நிகழாமல் தடுத்த களக்காடு போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

You'r reading 14 வயது சிறுவனை கொலை செய்ய முயற்சி – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்… Originally posted on The Subeditor Tamil

More Tirunelveli News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை