திருநெல்வேலியில் ரயில் எஞ்ஜின் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். தந்தை அதே ரயில் நிலையத்தில் இன்னொரு நடைமேடையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் துறையில் இளநிலை தர ஆய்வாளராக பணியாற்றி வரும் ஒருவருக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. தஞ்சாவூரை சேர்ந்த இவர் பணி நிமித்தம் திருநெல்வேலியில் வசித்து வருகிறார்.
காலை ரயில் நிலையத்தில் பணிக்கு வந்தவர், தன் மகன் ஞானேஸ்வரனையும் உடன் அழைத்து வந்துள்ளார். 14 வயதான ஞானேஸ்வரன் ஒன்பதாம் வகுப்பு மாணவனாவான். தந்தை வேறு இடத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது ஞானேஸ்வரன் நின்று கொண்டிருந்த ரயில் எஞ்ஜின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளான். அப்போது தன்னையுமறியாமல் உயர் அழுத்த மின் கம்பியை தொட்டுள்ளான். உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து ஞானேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான்.