சசிகலா சிறையில் சோதனை.. பெங்களூரு போலீஸ் அதிரடி..

Bengaluru police conducted raid in sasikala room in parappana agrahara jail

by எஸ். எம். கணபதி, Oct 9, 2019, 12:31 PM IST

சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் பெங்களூரு போலீசார் இன்று அதிகாலையில் திடீர் சோதனை நடத்தினர்.

கர்நாடகாவில் பெங்களூருக்கு அருகே பரப்பன அக்ரஹார மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் சுமார் 2 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவும், அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோரும் இந்த சிறையில்தான் தனித்தனி அறைகளில் இருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா, மதுபாட்டில் தாராளமாக கிடைப்பதாகவும், சிறை ஊழியர்களின் உதவியுடன் கைதிகள் மொபைல் போன் வாங்கி பயன்படுத்துவதாகவம் புகார்கள் வந்தன.

இதையடுத்து, பெங்களூரு மாநகர போலீசார் இன்று அதிகாலை 5 மணியளவில் அதிரடியாக சிறைக்குள் நுழைந்து அனைத்து கைதிகளின் அறைகளிலும் திடீர் சோதனை நடத்தினர். பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் இந்த போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் அறைகளும் தப்பவில்லை. அவர்களின் அறையிலும் மொபைல் போன் இருக்கிறதா, வேறு என்ன வசதிகள் வெளியில் இருந்து பெறப்பட்டிருக்கிறது என்று போலீசார் சோதனையிட்டனர்.

பெங்களூரு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறையில் கஞ்சா, மதுபாட்டில்கள் மற்றும் மொபைல் போன்கள் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது குறித்து விசாரணை நடத்தி சிறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்படும் என்றார்.

You'r reading சசிகலா சிறையில் சோதனை.. பெங்களூரு போலீஸ் அதிரடி.. Originally posted on The Subeditor Tamil

More Bangalore News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை