பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு ரத்து

Bihar police drop sedition charge against celebrities

by எஸ். எம். கணபதி, Oct 10, 2019, 09:40 AM IST

பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கு முடிக்கப்படுகிறது என்று பீகார் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சினிமா, கலை, இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பிரபலங்கள் கூட்டாக சேர்ந்து கடந்த ஏப்ரல் மாதம், பிரதமர் மோடிக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதினர். சினிமா தயாரிப்பாளர்கள் ஷியாம் பெனகல், அனுராக் காஷ்யப், பாடகர் சுபா முத்கல், தென்னிந்திய சினிமா பிரபலங்கள் மணிரத்னம், ரேவதி, வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா உள்ளிட்டோர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:

நாட்டில் வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரித்து விட்டன. குறிப்பாக, முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. 2016ம் ஆண்டில் மட்டும் தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் 840 நடந்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 254 மதரீதியான தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 579 பேர் காயமுற்றிருக்கிறார்கள். தாக்குதல் சம்பவங்களில் 62 சதவீதம், மக்கள் தொகையில் 14 சதவீதம் மட்டும் கொண்டுள்ள முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்டவை. கிறிஸ்தவர்கள் மீது மட்டும் 14 சதவீத தாக்குதல்கள் நடந்துள்ளன. குறிப்பாக, ஜெய்ஸ்ரீராம் என்ற போர் முழக்கம் போல் முழங்கி, தாக்குதல்கள் நடப்பது கண்டிக்கத்தக்கது.

எனவே, பிரதமர் மோடி வெறும் வார்த்தைகளால் கண்டித்தால் மட்டும் போதாது. இந்த குற்றங்கள் தொடராமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கங்கனாராவத், விவேக் அக்னிகோத்ரி உள்பட 62 பேர், அந்த 49 பேருக்கு பதிலளிக்கும் விதமாக பகிரங்க கடிதம் வெளியிட்டனர். அதில், அந்த 49 பேரும் வேண்டுமென்றே வெறுப்பூட்டும் வகையில் செயல்படுவதாகவும், பிரதமரின் மீது களங்கம் கற்பிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்நகரில் வக்கீல் சுதீர் ஓஜா என்பவர், தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், பிரதமருக்கும், நாட்டிற்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் பகிரங்க கடிதம் வெளியிட்ட மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது இ.பி.கோ. சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சூர்யகாந்த், இதை ஏற்று உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, முசாபர்நகரில் உள்ள சதார் போலீஸ் நிலையத்தில் ஒரு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதில், மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதும் தேசத் துரோகப் பிரிவிலும், இ.பி.கோ. பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த செய்தி வெளியானதும் நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேசத்துரோகமா? பேச்சுரிமையை மறுப்பதா? என்று அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாபர், நடிகர் நஸிருதீன்ஷா உள்பட 180 பிரபலங்கள் கூட்டாக சேர்ந்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பினர்.

அதில், பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், எதிர்கருத்து சொல்வதும் தேசத்துரோகமா என்று கேள்வி எழுப்பினர். இந்நிலையில், முசாபர்நகர் சிறப்பு எஸ்.பி. குமார் சின்கா, நிருபர்களிடம் கூறுகையில், வழக்கறிஞர் சுதீர்குமார் ஓஜா இது போல் நிறைய வழக்குகள் போடுபவர். இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தவறான முறையில் போடப்பட்டிருக்கிறது. வழக்கில் கூறப்பட்டுள்ள எந்த குற்றச்சாட்டும் சரியானது அல்ல என்பதால், வழக்கு முடிக்கப்பட்டு ஓரிரு நாளில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, வழக்கறிஞர் சுதீர்குமார் ஓஜா, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி கட்சியைச் சேர்ந்தவர் என்றும், அதனால் கூட்டணியில் இருந்து கொண்டே நிதிஷ்குமார் அரசுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார் என்றும் அந்த கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

You'r reading பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு ரத்து Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை