மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழாவையொட்டி, பிரபல நடிகர், நடிகைகளை பிரதமர் மோடி சந்தித்து, காந்தியின் கொள்கைகளை சினிமா மூலம் பரப்ப வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்த ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் இந்தி திரையுலகினர் மற்றும் கலாசார இயக்கங்களை சேர்ந்தவர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அவர்களிடம் மகாத்மா காந்தியின் கொள்கைகளை இன்றைய தலைமுறையிடம் சினிமா மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் மூலம் பரப்புமாறு கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியின் போது, மகாத்மா காந்தி குறித்த குறும்படம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், நடிகைகள் கங்கனா ரனாவத், நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தயாரிப்பாளர் போனிகபூர் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். முடிவில், தண்டியில் உள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்வையிடுமாறு மோடி கேட்டுக் கொண்டார்.
பிரதமருடன் நடிகர், நடிகைகள் மிகவும் ஆர்வத்துடன் செல்பி எடுத்து கொண்டனர். அவர்கள் தாங்கள் பிரதமருடன் எடுத்து கொண்ட போட்டோவை தங்கள் ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். ஷாரூக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரதமரும் தனது ட்விட்டர் பக்கத்தில் திரையுலகினருடன் உரையாடியதை வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். மேலும், மகாத்மா காந்தி கொள்கைகளை பரப்புவதில் திரையுலகினர் பங்கு பற்றியும் குறிப்பிட்டார்.