விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நாளை வாக்குப்பதிவு.. காலை 7 மணிக்கு தொடக்கம்

by எஸ். எம். கணபதி, Oct 20, 2019, 10:50 AM IST

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.

கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே நெல்லை மாவட்டம் நாங்குனேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எனவே, எம்.பி.யானதும் தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதே போல், கடந்த ஜூனில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி திடீர் மரணம் அடைந்தார். இதனால், நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளிலும் நாளை(அக்.21) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்செல்வன் (அ.தி.மு.க.), புகழேந்தி (தி.மு.க.), கந்தசாமி (நாம் தமிழர்) உள்பட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணன் உள்பட 23 பேர் போட்டியிடுகிறார்கள்.

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். கூட்டணியில் இருந்தாலும் பாஜக முக்கிய தலைவர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு வரவில்லை.

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இரு தொகுதிகளிலும் நாளை (அக்.21) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. வரும் 24ம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன.


Leave a reply