மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியும், அரியானாவில் பாஜக ஆட்சியும் நடைபெறுகிறது. இந்த 2 மாநிலங்களிலும் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பரில் முடிவடைகிறது.
இரு மாநிலங்களிலும் அக்டோபர் 21ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதன்படி, நாளை காலை 7 மணிக்கு இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் ஆளும் பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதே போல், எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன.
அரியானாவில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஆளும் கட்சியான பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அரியானாவில் பிரதமர் மோடி நான்கைந்து முறை தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று சிர்சா, ரேவாரி ஆகிய இடங்களில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
மகாராஷ்டிராவில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜகவின் தேவேந்திரநாத் பட்நாவிஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அரியானாவில் பாஜக வெற்றி பெற்று, அக்கட்சியின் மூத்த தலைவர் மனோகர்லால் கட்டார் முதலமைச்சராக பதவி வகிக்கிறார்.
நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இரு மாநிலங்களையும் பாஜக கூட்டணியே மீண்டும் கைப்பற்றுமா அல்லது காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா என்பது வரும் 24ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தெரியும்.