நாளைதான் உங்களுக்கு கடைசி.. அதிகாரிகளை எச்சரிக்கும் கலெக்டரின் கோபப் பேச்சு.. வாட்ஸ் அப்பில் வைரலான ஆடியோ..

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் எல்லா வீடுகளையும் நாளைக்குள்(அக்.21) ஒதுக்கீடு செய்யாவிட்டால், அத்தனை அதிகாரிகளையும் மொத்தமாக சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி கோபமாக பேசும் ஆடியோ, வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.

அந்த ஆடியோவில் கலெக்டர் கந்தசாமி பேசியிருப்பதாவது:-

வணக்கம் நான் கலெக்டர் பேசுகிறேன். ஏற்கனவே நான் கடந்த மீட்டிங்கிலேயே பிஎம்ஓய் ஸ்கீம் மற்ற ஸ்கீம்ஸ் எல்லாம் ரொம்ப தொய்வா இருக்குன்னு ரிவியூ பண்ணுனோம். கடந்த முறை இந்த வீடு வழங்கும் திட்டத்தில் அரசு புள்ளி விவரப்படியும், தகுதியானவர்கள் பட்டியலும் நாம் கையில் வைத்திருக்கிறோம். இது வீடு போக மாட்டேங்கிறது? இதில் தினந்தோறும் நிறைய புகார்கள் வருகிறது. இன்று நடந்த விவசாயிகள் குறை தீர்வுநாள் கூட்டத்திலும் இது சம்பந்தமான புகார்கள் வந்திருக்கிறது.

திங்கட்கிழமைதான்(அக்.21) உங்களுக்கு உச்சகட்டம். ஒன்று, நான் இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா அல்லது நீங்கள் பணியில் இருக்கிறீர்களா? என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். திங்கட்கிழமைக்குள் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்காவிட்டால், நான் எத்தனை பேரையும் சஸ்பெண்ட் பண்ணத் தயாராக இருக்கிறேன். இதனை நீங்கள் எப்படி வேண்டும் என்றாலும் எடுத்து கொள்ளலாம். நீங்கள் தவறு செய்வதை பார்த்து கொண்டிருக்க நான் இங்கு உட்காரவில்லை.

தப்பு செய்பவர்களுக்கு காவல் காப்பவனும் இல்லை. இதுதான் என்னுடைய உச்சக்கட்ட கோபம். அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும், பஞ்சாயத்து செயலாளர்களும் இதனை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டும். திங்கட்கிழமை நீங்கள் வேலைக்கு வந்து விட்டு, மாலையில் வேலையில்லாமல் போறீங்களா என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். நான் இதை ஒரு சவாலாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் பேசியுள்ளார்.

இந்த வாய்ஸ் மெசேஜை கலெக்டர் கந்தசாமி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ளார். இது தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தைத் தாண்டி எல்லா அரசு ஊழியர்களின் செல்போன்களிலும் பரிமாறப்பட்டு வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement