கேரளாவின் பிடல் காஸ்ட்ரோ என்றழைக்கப்படும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் 96வது பிறந்த நாளை நேற்று (அக்.20) கேக் வெட்டி கொண்டாடினார்.
நாட்டின் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக திகழும் வி.எஸ்.அச்சுதானந்தன், பல ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து வாழ்ந்து வருபவர். கடந்த 1964ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுவில் இருந்து வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கிய 34 தலைவர்களில் ஒருவர்.
அச்சுதானந்தன் நேற்று தனது 96வது பிறந்த நாளை தனது குடும்பத்தினரின் மத்தியில் எளிமையாக கொண்டாடினார். அவர் கேக் வெட்டி தனது மனைவிக்கு ஊட்டினார். தொடர்ந்து அவருக்கு மனைவி கேக் ஊட்டினார். கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், அச்சுதானந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மிகவும் மதிக்கப்படும் முதுபெரும் அரசியல் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் என்று அவர் கூறினார். முதல்வர் பினராயி விஜயன், கம்யூனிஸ்ட் தலைவர்கள். முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோனி, கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் அச்சுதானந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கேரளாவில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளை அச்சுதானந்தன் வகித்திருக்கிறார். அவர் கேரளாவின் பிடல் காஸ்ட்ரோ என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டிருக்கிறார்.