அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்... டெல்லி சென்றார் கட்டார்.

Haryana CM Khattar leaves for Delhi to meet senior BJP leaders

by எஸ். எம். கணபதி, Oct 25, 2019, 10:43 AM IST

அரியானாவில் தொங்குசட்டசபை ஏற்பட்ட போதும், 40 இடங்கள் பெற்ற தனிப்பெரும் கட்சியான பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது. இதற்காக கட்சித் தலைவர் அமித்ஷாவை சந்திக்க முதல்வர் கட்டார் டெல்லி சென்றுள்ளார்.

அரியானா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றது. இங்குள்ள 90 சட்டசபைத் தொகுதிகளுக்கும் கடந்த 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. டைம்ஸ் நவ், ஏ.பி.பி. சி ஓட்டர் உள்பட பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜக 70 இடங்களுக்கு மேல் கைப்பற்றி பலமான ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது. அதேசமயம், இந்தியா டுடே-ஆக்ஸிஸ் கணிப்பில் மட்டும் பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி ஏற்படலாம் என்று கூறப்பட்டிருந்தது. பாஜக 32-44 இடங்கள், காங்கிரஸ் 30-42 இடங்கள் என்று இழுபறியாக வரலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. அதில் பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தொங்கு சட்டசபை ஏற்பட்டது. பாஜக 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களையும், லோக்தளம், எச்.எல்.பி ஆகியவை தலா ஒரு தொகுதியையும் கைப்பற்றியுள்ளன. இது தவிர 7 சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது பாஜக ஆட்சி அமைக்க மேலும் 6 எம்.எல்.ஏ.க்கள் தேவை. வெற்றி பெற்றுள்ள சுயேச்சைகளில் 5 பேர் பாஜகவில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிட்டவர்கள். எனவே, அவர்களையும் மற்ற 2 சுயேச்சைகளையும் வளைத்தாலே பாஜக ஆட்சி அமைத்து விடலாம்.

இருந்தாலும், மதில் மேல் பூனை போல் இல்லாமல் உறுதியான ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், ஜனநாயக ஜனதாவின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். தேவிலாலின் மகன் ஓம்பிரகாஷ் சவுதலாவின் லோக்தளம்(ஐ.என்.எல்.டி) கட்சி கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 15 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. அந்த கட்சியில் இருந்து குடும்பச் சண்டை காரணமாக சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் தனியாக பிரிந்து சென்று ஆரம்பித்த கட்சிதான் ஜனநாயக ஜனதா.

அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்து துஷ்யந்த், பாஜக கூட்டணி ஆட்சியில் இணைய விரும்புகிறார். அதனால், அவரது கட்சியுடன் இணைந்து மகாராஷ்டிராவைப் போல் கூட்டணி ஆட்சி அமைக்கலாமா என்று பாஜக யோசித்து வருகிறது. இதற்காக முதல்வர் கட்டாரை டெல்லிக்கு வருமாறு கட்சித் தலைவர் அமித்ஷா அழைத்துள்ளார். டெல்லியில் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து விட்டு வந்து, இன்று மாலையே கவர்னரை சந்தித்து கட்டார் ஆட்சியமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்... டெல்லி சென்றார் கட்டார். Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை