சிவசேனாவுக்கு முதல்வர் இல்லை.. துணை முதல்வர் பதவிக்கு ஏற்பு? மகாராஷ்டிர சிக்கலுக்கு தீர்வு

Maharastra c.m. post Devendra Fadnavis, Deputy c.m. to Shiva Sena

by எஸ். எம். கணபதி, Oct 31, 2019, 11:50 AM IST

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு துணை முதல்வர் மற்றும் முக்கிய துறை அமைச்சர் பதவிகள் வழங்குவதற்கு பாஜக முன்வந்திருப்பதாகவும், அதற்கு சிவசேனா ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

மகாராஷ்டிராவில் அக்.21ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின் போது, 50:50 என்ற விகிதத்தில் சிவசேனா சீட் கேட்டது. ஆனால், அதற்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை.

அதற்கு பின், பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேரடியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் பேசினார். அப்போது, ஆட்சியைப் பிடித்தால் இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி என்பதற்கு ஒப்புக் கொண்டால், குறைந்த இடங்களில் போட்டியிடுவதாக சிவசேனா கூறியது. இதையடுத்து, பாஜக 150 இடங்களிலும், அதன் சின்னத்தில் 14 குட்டி கட்சிகளும் போட்டியிட்டன. சிவசேனா 122 இடங்களில் மட்டும் போட்டியிட்டது.

தேர்தல் முடிவுகளின்படி, பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. இதனால், தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தங்கள் கட்சிக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்றும், அமைச்சரவையில் சரிபாதி தர வேண்டுமென்றும் சிவசேனா கேட்டது.

ஆனால், பாஜக முதலமைச்சர் பட்நாவிஸ், சிவசேனாவுக்கு முதல்வர் பதவி தருவதாக எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று எங்கள் கட்சித் தலைவர்(அமித்ஷா) கூறியுள்ளார். இது வரை சிவசேனாவிடம் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று கூறினார். இதையடுத்து, பாஜக எங்கள் நிபந்தனையை ஏற்க மறுத்தால், நாங்கள் மாற்று வழிகளை தேடுவோம் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் கூறினார். இருதரப்பிலும் முரண்டு பிடிக்கவே ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இதனிடையே நேற்று (அக்.30) மும்பையில் பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம், கட்சியின் தேசியத் துணை தலைவர் அவினாஷ்ராய் கண்ணா மற்றும் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற கட்சித் தலைவராக தேவேந்திர பட்நாவிஸை ஏகமனதாக தேர்வு செய்தனர்.

இதே போல், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பால்தாக்கரே பேரன் ஆதித்யா தாக்கரே, சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

இந்நிலையில், பாஜக, சிவசேனா சண்டை ஒரு புறம் நீடித்தாலும் இருதரப்பிலும் ரகசியமாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. இதில், முதல்வர் பதவியை விட்டுத் தரப் போவதில்லை என்பதில் பாஜக உறுதியாக இருந்துள்ளது. இதனால், சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவியும், முக்கியமான துறைகளின் அமைச்சர் பதவிகளும் தருவதாக உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், பாஜகவிலும் ஒரு துணை முதல்வர் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், எந்தெந்த துறைகள், எத்தனை அமைச்சர்கள் என்பது இறுதி செய்யப்பட்டதும் ஓரிரு நாளில் முதல்வராக பட்நாவிஸ் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading சிவசேனாவுக்கு முதல்வர் இல்லை.. துணை முதல்வர் பதவிக்கு ஏற்பு? மகாராஷ்டிர சிக்கலுக்கு தீர்வு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை