மகாராஷ்டிராவில் விரைவில் புதிய ஆட்சி அமைக்கப்படும் என்று தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றுள்ளன. சிவசேனா, தேர்தலுக்கு முன்பு பேசியபடி, இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்றும், அமைச்சரவையில் சரிபாதி தர வேண்டுமென்றும் பிடிவாதமாக கேட்டு வருகிறது. பாஜகவோ தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து வருகிறது.
இதனால், தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்களாகியும் இது வரை மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமையவில்லை.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த முறை முதலமைச்சராக இருந்த தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன்பின்பு, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிவசேனாவுடன் உள்ள கூட்டணி பிரச்னை குறித்து நானோ, பாஜகவில் உள்ள வேறு எவருமோ எந்த கருத்தும் சொல்ல மாட்டோம். விரைவில் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைக்கப்படும்என்றார்.
பாஜக செய்தி தொடர்பாளர் கேசவ் உபாத்யாய் கூறுகையில், ஓரிரு நாளில் பிரச்னை முடிந்து விடும். சிவசேனாவுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றார்.