மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா இடையே இன்னும் பிரச்னை தீரவில்லை. இதனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி 13 நாட்களாகியும் அங்கு புதிய ஆட்சி அமையவில்லை. இதனிடையே, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை பட்நாவிஸ் சந்தித்து பேசியுள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றுள்ளன. எனவே, கூட்டணி ஆட்சிதான் அமைக்க முடியும்.
தேர்தலுக்கு முன்பு தொகுதி பங்கீட்டின் போது, சிவசேனா 50:50 என்ற விகிதத்தில் சீட் கேட்டது. இதற்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை.
அதன்பிறகு, தங்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்றும், அமைச்சரவையில் சரிபாதி தர வேண்டுமென்றும் சிவசேனா கேட்டிருக்கிறது. இதற்கு பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. அதனால்தான், சிவசேனாவுக்கு 122 இடங்களை மட்டும் அளித்து விட்டு, பாஜக 150 இடங்களுக்கு மேல் போட்டியிட்டது.
தற்போது, சிவசேனா கட்சி, முதல்வர் பதவியை பிடிவாதமாக கேட்டு வருகிறது. பாஜகவோ தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து வருகிறது. இதனால், தேர்தல் முடிவு வெளியாகி 13 நாட்களாகியும் இது வரை மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமையவில்லை.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த முறை முதலமைச்சராக இருந்த தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். மத்திய அமைச்சரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த தலைவருமான நிதின் கட்கரியையும் சந்தித்து பேசினார்.
இதற்கிடையே, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திற்கு சிவசேனா மூத்த தலைவர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பாஜக கூட்டணி தர்மத்தை மீறுவதாகவும், இந்த விஷயத்தில் மோகன் பகவத் தலையிட வேண்டுமென்றும் கோரியிருந்தார். இதைத் தொடர்ந்து, பட்நாவிஸ் நாக்பூருக்கு சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்தார். இருவரும் அப்போது பாஜகவின் நிலைப்பாடு குறித்தும், சிவசேனா நிலைப்பாடு குறித்தும் விவாதித்தனர்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தலையிட்டு, இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்னையை தீர்த்து வைப்பார் என்று மகாராஷ்டிர அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையே, பாஜக ஆட்சியமைக்க முன்வராவிட்டால், காங்கிரஸ் கூட்டணி ஆதரவில் தாங்கள் ஆட்சியமைக்கத் தயாராக உள்ளதாக சிவசேனா கூறி வருகிறது.