மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்து விட்ட நிலையில், பாஜக மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் ஆபரேஷன் லோட்டஸ் வேலையைத் துவங்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின் போது, சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், வெளிப்படையாக அப்படி அறிவிக்கப்படவில்லை.
எனினும், இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்று சிவசேனா பிடிவாதமாக கேட்டது. பாஜகவோ தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து விட்டது. மேலும், அப்படியொரு ஒப்பந்தமே போடவில்லை, சிவசேனா பொய் சொல்கிறது என்று பாஜக கூறி விட்டது.
இந்த சண்டைக்கு பின், ஆட்சியமைப்பதில் நீண்ட இழுபறி ஏற்பட்டது. இதன்பின், பாஜக முன்னாள் முதல்வர் பட்நாவிஸ், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து தங்களுக்கு மெஜாரிட்டி இல்லாததால், ஆட்சியமைக்க முடியவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, சிவசேனாவை கவர்னர் அழைத்தார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் 3 நாட்கள் அவகாசம் அளித்தால், அவர்களின் ஆதரவு கடிதத்துடன் வருவதாகவும் சிவசேனா தலைவர்கள் கவர்னரிடம் தெரிவித்தனர். ஆனால், அவர் அவகாசம் அளிக்க மறுத்து விட்டார்.
அதற்கு பிறகு தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்த கவர்னர் கோஷ்யாரி, அன்று மாலையே ஜனாதிபதி ஆட்சியமைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை அனுப்பினார். இதையடுத்து, டெல்லியில் அவசர, அவசரமாக மத்திய அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் கூடியது. அதில் கவர்னரின் அறிக்கையின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதற்கிடையே தங்களுக்கு கவர்னர் போதிய கால அவகாசம் தரவில்லை என்று கூறியும், ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா அவசர மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், பாஜக தற்போது சிவசேனாவை கைவிட்டு விட்டு, எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டுமென்று முயன்று வருகிறது. இதற்காக வழக்கம் போல் ஆபரேஷன் லோட்டஸ் வேலையைத் துவங்கியுள்ளது. அதாவது, கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்களை இழுத்ததைப் போல் மகாராஷ்டிராவிலும் வேலையை ஆரம்பித்துள்ளது.
மொத்தம் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 145 உறுப்பினர்கள் தேவை. தற்போது பாஜகவிடம் 105 பேர் இருக்கிறார்கள். சிவசேனா 56, தேசியவாதகாங்கிரஸ் 54, காங்கிரஸ் 44, சுயேச்சைகள் 29 பேர் இருக்கிறார்கள். இவர்களில் முதல் கட்டமாக சுயேச்சைகள் 29 பேரிடமும் பாஜக தலைவர்கள் மறைமுகமாக பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளனர். அவர்கள் வளைத்து விட்டால், அதன்பிறகு 11 எம்.எல்.ஏ.க்கள்தான் தேவை. இம்முறை சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலரையும், மற்ற கட்சிகளில் சிலரையும் இழுக்க முடியும் என்று பாஜக நம்புகிறது. எனவே, ஜனாதிபதி ஆட்சியை சில மாதங்களுக்கு நடத்தி, அதற்குள் மெஜாரிட்டியை பிடித்து விட பாஜக முயன்று வருகிறது.
பாஜக மூத்த தலைவர் நாராயண் ராணே கூறுகையில், நான் பட்நாவிசிடம் பேசினேன். எப்படியாவது பாஜக ஆட்சியை அமைத்து விட வேண்டுமென்று உறுதியாக இருக்கிறார். அவருக்கு நான் உதவியாக இருப்பேன். ஆட்சியமைக்க என்ன தேவையோ அதையெல்லாம் செய்வோம். சிவசேனாவால் என்சிபி-காங்கிரஸ் ஆதரவை பெற முடியாது. அவர்கள் சிவசேனாவை முட்டாளாக்கி விட்டார்கள் என்று கூறினார். நாராயணன் ராணே ஏற்கனவே சிவசேனாவில் இருந்தவர். அதனால், அவரே சிவசேனா எம்.எல்.ஏ.க்களை வளைத்து விடுவார் என்றும் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.