நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2018-19ம் ஆண்டில் மட்டும் பாஜகவுக்கு ரூ.743 கோடி நன்கொடையாக (தேர்தல் நிதி) பெற்றிருக்கிறது. இந்த தொகை மற்ற கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையை விட 3 மடங்கு அதிகமாகும்.
அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதை தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்ட வேண்டும். ஆண்டுதோறும் ஒவ்வொரு கட்சிகளும் பெறும் நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவரங்களை எடுத்து, ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு(ஏ.டி.ஆர்.) ஆய்வு செய்து பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகிறது.
தற்போது அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2017-18ம் ஆண்டில் பாஜக ரூ.437 கோடி நன்கொடை பெற்றது. அப்போது காங்கிரசுக்கு வெறும் ரூ.27 கோடிதான் கிடைத்திருக்கிறது. 2018-19ம் ஆண்டில் குறிப்பாக தேர்தலுக்கு முன்பு தேர்தல் நிதியாக பெறப்பட்ட நன்கொடைகளை பார்த்தால், அதிகபட்சமாக பாஜக ரூ.743 கோடி நன்கொடையாக பெற்றதாக கணக்கு காட்டியுள்ளது. 2வது இடத்தில் காங்கிரஸ் ரூ.147 கோடி நன்கொடை பெற்றதாக கூறியுள்ளது.
பாஜக பெற்றிருக்கும் தொகையானது, மற்ற கட்சிகள் எல்லாம் பெற்ற மொத்த நன் கொடையை விட மூன்று மடங்கு அதிகமாகும். மேலும், பாஜகவுக்கு புராக்ரஸிவ் எலக்ட்டோரல் டிரஸ்ட் என்ற ஒரு அமைப்பு மட்டுமே ரூ.357 கோடி நன்கொடையாக வசூலித்து கொடுத்திருக்கிறது. பாஜகதான் கடந்த 10 ஆண்டுகளாகவே மற்ற கட்சிகளை விட அதிகமான நன்கொடை வசூலித்திருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாகவே, மத்தியில் ஆளும் கட்சிக்குத்தான் தேர்தல் நிதி அதிகமாக கிடைக்கும். அதற்கு காரணம், அந்த ஆட்சியில் தங்களுக்கு தேவையான காரியங்களை செய்து கொள்வதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக நன்கொடைகளை கொடுக்கும். அதே போல், நன்கொடை அளித்த கம்பெனிகளை கட்சிகள் வெளிப்படையாக அறிவிக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.