ரஜினி, கமலுக்கு என்ன அரசியல் தெரியும்? எடப்பாடி கடும் தாக்கு..

Edappadi Palanisamy attacks Rajini and Kamal

by எஸ். எம். கணபதி, Nov 13, 2019, 11:31 AM IST

ரஜினி, கமலுக்கு எல்லாம் என்ன அரசியல் தெரியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சேலத்தில் இருந்து சென்னைக்கு 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக அமைப்பதற்காக நிலம் எடுத்தோம். ஆனால், நிலம் கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். இப்போது இது தொற்று நோய் போல் பரவி எந்த திட்டத்திற்கும் நிலம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்கோபுங்கள் அமைப்பதற்கும், சாலையை விரிவுபடுத்துவதற்கும் நிலம் கொடுக்காவிட்டால், அரசாங்கம் என்ன செய்ய முடியும்?

குறிப்பிட்ட காலத்திற்குள் நாம் நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசுக்கு கொடுத்தால் தான் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஆனால், நிலத்தை கையகப்படுத்தும் போது சிலர் கோர்ட்டுக்கு செல்கிறார்கள். சிலர் போராட்டம் நடத்துகிறார்கள். இதற்கு சில கட்சிகளும் துணை போகின்றன. அதனால், பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

அடுத்த 10 ஆண்டுகள் கழித்து என்ன தேவைப்படும் என்பதை திட்டமிட்டு நாங்கள் செயல்படுத்துகிறோம். 8 வழிச்சாலை முழுவதுமாக நிறைவேறுவதற்கு ஐந்தாண்டுகள் ஆகும். 2001-2002-ல் ஒரு கோடி வாகனங்கள் இருந்தன. இப்போது 3 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதனால்தான் விபத்துகளும் அதிகமாகின்றன. இந்த விபத்துகளை குறைப்பதற்குதான் நவீன முறையில் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் 14 சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது.

முதற்கட்டமாக 4 சாலைகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து, அதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பின்னர், ஆளுமைமிக்க தலைமைக்கு வெற்றிடம் என்று ரஜினி சொன்னது குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், வெற்றிடம் என்று சொன்னவர் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை. கமல், நாடாளுமன்ற தேர்தலில் எவ்வளவு ஓட்டு வாங்கினார்? 65, 66 வயது ஆகிவிட்டால் திரைப்பட துறையில் வாய்ப்பு கிடைக்காது. அதனால், கட்சி ஆரம்பிக்கிறார்கள்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதில் தவறில்லை. ஆனால், மற்றவர்களை குறை சொல்லக் கூடாது. 1974ல் நான் அ.தி.மு.க.வில் சேர்ந்து கஷ்டப்பட்டு உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். 45 ஆண்டு காலம் கட்சியில் பணியாற்றி இருக்கிறோம். மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறோம்.

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் மக்களுக்காக என்ன செய்தார்கள்? திரைப்படங்களில் நடித்தார்கள், வருமானத்தை பெருக்கிக் கொண்டார்கள். இப்போது வரை சம்பாதித்து கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களிடத்தில் தங்களுக்கு பெரிய செல்வாக்கு இருப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள்.

இவர்களை விட மிகப்பெரிய நடிகர் சிவாஜி கணேசனே தேர்தலை சந்தித்த போது என்ன நிலைமை ஏற்பட்டது? எம்.ஜி.ஆருக்கு அடுத்த நிலையில் நடிகர் திலகம் இருந்தார். அவரே கட்சி தொடங்கிய போது அவருக்கு என்ன நிலைமை ஏற்பட்டது. அதே நிலைமைதான் கமலுக்கும் ஏற்படும். அவருக்கு அரசியலில் என்ன தெரியும்? எத்தனை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளது என்று தெரியுமா?, அந்த பகுதி மக்களின் பிரச்சினை தெரியுமா? ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும். அதற்கு பிறகு அவருக்கும் பதில் கொடுக்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

You'r reading ரஜினி, கமலுக்கு என்ன அரசியல் தெரியும்? எடப்பாடி கடும் தாக்கு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை