அறைக்குள் பேசியதை வெளியில் சொல்வதா? சிவசேனாவுக்கு அமித்ஷா பதிலடி

by எஸ். எம். கணபதி, Nov 14, 2019, 09:33 AM IST
Share Tweet Whatsapp

கட்சிகளுக்கு இடையே அறைக்குள் ரகசியமாக பேசியதை எல்லாம் வெளியே சொல்வது தவறு. பாஜக ஒருபோதும் அதை செய்யாது என்று அமித்ஷா கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105, சிவசேனா 56 தொகுதிகளில் வென்றன. ஆனால், தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தங்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டுமென்று சிவசேனா கோரியது. ஆனால், அப்படி பேசவே இல்லை என்ற மறுத்த பாஜக தலைவர்கள், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று அறிவித்தனர்.

இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தது. மத்திய அரசில் இருந்த சிவசேனாவின் ஒரே அமைச்சர் அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்தார். இந்நிலையில், மெஜாரிட்டி இல்லாததால் பாஜக ஆட்சியமைக்கவில்லை. 2வது பெரிய கட்சியான சிவசேனா கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி, கால அவகாசம் கேட்டது. மேலும், தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி.), காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி திடீரென ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். மத்திய அரசும், அதன்படி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி விட்டது.

இந்த விவகாரத்தில் இது வரை அமைதி காத்த மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷா நேற்று(நவ.13) தனது கருத்தை கூறினார். அவர் கூறுகையில், அறைக்குள் நடத்திய பேச்சுவார்த்தைகளை வெளியே சொல்வது முறையற்றது. பாஜக ஒரு போதும் அந்த தவறை செய்யாது. எங்களை பொறுத்தவரை பட்நாவிஸ்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று பிரசாரக் கூட்டங்களில் 100 முறை சொல்லியிருக்கிறேன். அப்போது சிவசேனா என்ன செய்தது? இப்போது புதிய நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அதையெல்லாம் ஏற்க முடியாது.

ஜனாதிபதி ஆட்சியை அவசரமாக கொண்டு வந்து விட்டதாக குறை கூறுகிறார்கள். அது மக்களிடம் அனுதாபத்தை பெறுவதற்காக அப்படி பேசுகிறார்கள். ஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமலில் இருக்கும். அதற்குள் எந்த கட்சிக்கு மெஜாரிட்டி எண்ணிக்கை கிடைத்தால், ஆட்சியமைக்க உரிமை கோரலாம். அல்லது கவர்னர் 6 மாதம் கழித்து சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார் என்று தெரிவித்தார்.


Leave a reply