சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..

Supreme Court rules against Supreme Court, keeps CJI office under RTI

by எஸ். எம். கணபதி, Nov 14, 2019, 09:26 AM IST

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்.டி.ஐ.) கீழ் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக அவர் விசாரித்த முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை அளித்து வருகிறார். இந்த வரிசையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகம் வருமா என்பது குறித்த வழக்கில் அவரது தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்துள்ளது.

ஆர்.டி.ஐ. ஆர்வலர் அகர்வால் என்பவர் கடந்த 2009ம் ஆண்டில் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். கடந்த 7.5.1997ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூட்டத்தில், நீதிபதிகள் சொத்துக்கணக்கு காட்ட வேண்டுமென்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் நீதிபதிகளின் சொத்து கணக்குகளை அவர் கேட்டிருந்தார். அதை சுப்ரீம் கோர்ட் பதிவாளர் அதை மறுத்திருந்தார். இதை எதிர்த்து தான் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திர பட், நவீன அரசியலமைப்பு காலத்தில் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரங்களும் மக்களுக்கு தெரிய வேண்டும் என்று குறிப்பிட்டு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகமும் ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் பதிவாளர் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் ஏ.பி.ஷா, விக்ரம்ஜித் சென், முரளிதர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி தீர்ப்பை உறுதி செய்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு, ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதன்பின், தலைமை நீதிபதி கோகய் தலைமயில் நீதிபதிகள் ரமணா, சந்திரசூட், தீபக்குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.

தலைமை நீதிபதி கோகய், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சந்திரசூட் ஆகியோர் அளித்த தீர்ப்பில், நீதித்துறை சுதந்திரமும், பொறுப்புடைமையும் ஒரு சேர இருக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்தும். நீதித்துறை சுதந்திரம் என்பது ரகசிய அறைகளுக்குள் இருந்து செயல்படுவதால் கிடைப்பதல்ல. சுப்ரீம் கோர்ட்டும் பொது அமைப்புதான். எனவே, தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் என்று கூறியுள்ளது. நீதிபதிகள் ரமணா, தீபக்குப்தா ஆகியோர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகம் ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் வரக் கூடாது.

இதன்மூலம், நீதிபதிகளின் தனிப்பட்ட சுதந்திரம் பறிபோய் விடும் என்று தீர்ப்பு கூறினர். எனினும், மெஜாரிட்டி தீர்ப்பு அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டும், ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் வரும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், நீதிபதிகளின் தனிப்பட்ட தகவல்களுக்கு இது பொருந்தாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Delhi News

அதிகம் படித்தவை