சிவசனோ-பாஜக கூட்டணி உடன்பாடு ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடிக்கு உண்மைகளை தெரிவிக்காமல் அமித்ஷா மறைத்து விட்டார் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105, சிவசேனா 56 தொகுதிகளில் வென்றன. ஆனால், தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தங்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டுமென்று சிவசேனா கோரியது. ஆனால், அப்படி பேசவே இல்லை என்ற மறுத்த பாஜக தலைவர்கள், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று அறிவித்தனர்.
இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தது. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தி விட்டது. இதற்கிடையே, பாஜக தலைவர் அமித்ஷா கூறுகையில், எங்களை பொறுத்தவரை பட்நாவிஸ்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று பிரசாரக் கூட்டங்களில் 100 முறை சொல்லியிருக்கிறேன். அப்போது சிவசேனா என்ன செய்தது? இப்போது புதிய நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அதையெல்லாம் ஏற்க முடியாது என்றார்.
இதற்கு சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று பதிலளிக்கையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, உத்தவ் தாக்கரே கூட பல முறை அடுத்த முதல்வர் சிவசேனாவைச் சேர்ந்தவர்தான் என கூறியிருக்கிறார். அப்போது பாஜக ஏன் எதிர்க்கவில்லை? இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தருவதாக சிவசேனாவிடம் ஒப்புக் கொண்டதை பிரதமர் மோடிக்கு தெரிவிக்காமல் அமித்ஷா மறைத்து விட்டார். நாங்கள் பிரதமர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். அவரது பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தால் அது அவரை அவமதிப்பதாகும் என்று பொறுத்திருக்கிறோம் என்றார்.