தமிழகத்தில் அரசியல் தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று ரஜினி சொன்னது உண்மைதான் என மு.க.அழகிரி கூறியிருக்கிறார். அந்த இடத்தை ரஜினியே நிரப்புவார் என்றும் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இருந்த போது, பல்வேறு பிரச்னைகள் காரணமாக கட்சியில் இருந்து மு.க.அழகிரியை நீக்கினார். ஆனாலும் மு.க.அழகிரி அவ்வப்போது கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்து வந்தார். கருணாநிதியைத் தவிர யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்றும் கூறி வந்தார்.
கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியினரும் அவரை முழுமனதாக ஏற்றுக் கொண்டு விட்டனர். இந்த நிலையில், அழகிரி மீண்டும் கட்சியில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்தார். ஆனால், அவரை ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளவில்லை. கருணாநிதி குடும்பத்தினர் கூட, அழகிரிக்கு ஆதரவாக பேசிப் பார்த்தும் ஸ்டாலின் மசியவே இல்லை. அழகிரியை சேர்த்தால் கட்சியில் கட்டுப்பாடு போய் விடும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அதன்பிறகு, கருணாநிதி மறைந்து ஓராண்டு முடிந்து நினைவு நாளில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் பேரணி நடத்தி, கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு, திமுகவில் ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொள்வதாக பேட்டியளித்தார். ஆனாலும், ஸ்டாலின் அவரை கட்சியில் சேர்த்து கொள்ளாமல் மவுனம் சாதித்தார்.
இந்த சூழ்நிலையில், பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் இல்லத்திற்கு நேற்று(நவ.13) மு.க.அழகிரி சென்று அவரது மகள் திருமணத்திற்கு வாழ்த்து கூறிவிட்டு வந்தார். இதைத் தொடர்ந்து இன்று சென்னை வந்த மு.க.அழகிரி, விமான நிலையத்தில் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர், தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறாரே என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ரஜினி சொன்னது உண்மைதான், அரசியல் தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்றார். ரஜினி தொடங்கும் கட்சியில் நீங்கள் சேருவீர்களா? அவருக்கு ஆதரவு அளிப்பீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று பதிலளித்தார்.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை சந்தித்த பின்பு, ரஜினிக்கு ஆதரவாக அழகிரி பேசியுள்ளதால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.